சென்னை:சென்னை போயஸ் கார்டனில் சசிகலா தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது எப்படி உள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகள் 90 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, பெண் முதலமைச்சர் என்பதால் பல விமர்சனங்களை முன் வைத்தார்கள். ஆனால், இன்றைக்கு அவர் புகைப்படம் அனைவருக்கும் தேவைப்படுகிறது. அதனால் அதனை பயன்படுத்துகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொண்டார். தற்பொழுது இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் காவல்துறையை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்பதால் கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. காவல்துறையை இயக்குபவர்கள் சரியில்லை.
ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கப்படவில்லை. ரேஷன் பொருட்கள் டெண்டர் விடப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் தான் பொருட்கள் வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த ஆட்சி நிர்வாகம் சரியானதாக இல்லை. மக்கள் பிரச்னையை சட்டப்பேரவையில் பேச வேண்டிய சரியான நபர்கள் இல்லை. அதனால் தான் ஆளுங்கட்சி அவர்கள் விருப்பப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக சட்டப்பேரவையை புறக்கணிப்பது தவறு. மக்கள் வாக்களித்து வரும் போது தவறாக செயல்படும் திமுக அரசை தட்டிக்கேட்க உள்ளே இருப்பது தான் நியாயம். அமைச்சர் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்கள் அவையில் பேசுவது மிகவும் தவறாக உள்ளது. அவ்வாறு பேசக்கூடாது. போதைப் பொருட்களின் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. மாநில அரசு, மத்திய அரசு உடன் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது.