தஞ்சாவூர்:'இந்திய விண்வெளியின் தந்தை'என்று அறியப்படுகிற விக்ரம் சாராபாய் பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர் விஞ்ஞானி விருதிற்காகத் தேர்வு, இந்திய அளவில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. ஐந்து கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வின் தொடக்கத்தில் 22,452 மாணவ மாணவியர்கள் ஆர்வமாகப் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு பாராட்டு விழா (Credits - ETV Bharat Tamil Nadu) இதில் சர்வதேச அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்விற்கு செல்ல தகுதி பெறுவர் என்பதால், 2ம் கட்ட தேர்விற்கு அதிலிருந்து 546 மாணவர்கள் மட்டுமே தேர்வு பெற்றனர். இறுதியில் நடைபெற்ற 5ஆம் கட்ட தேர்வில் 40 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
இதில் முதல் 5 இடங்களை பிடிக்கும் மாணவர்க்கும் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் விஞ்ஞானி விருதும், இது தவிற கூடுதலாக ஒரு சிறப்பு பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தகுதி பெற்ற வெற்றியாளர்களை இஸ்ரோ மற்றும் நாசா நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
கும்பகோணம் மாணவர்கள் சாதனை:இந்த போட்டியில் கும்பகோணத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் தீபேஷ் துளசிதான் (14) மூன்றாம் இடம் பிடித்தார். இவர் ஏற்கனவே சிலம்பம், வில்வித்தை மற்றும் கராத்தே ஆகிய போட்டிகளில் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அதே போல் கும்பகோணம், நகர மேல்நிலைப்பள்ளியில் பயிலும் எஸ்.ரித்திக் (13) என்ற மாணவர் இப்போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றார். இவருக்கும் விருது, பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 5 நிலை போட்டிகளையும் சரியாக நிறைவு செய்த கும்பகோணத்தை சேர்ந்த 9 மாணவ மாணவியர்கள் மற்றும் தென்காசி மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 2 மாணவர்கள் என மொத்தம் 11 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பெற்றனர்.
பாராட்டு விழா:இவர்களுக்கான பாராட்டுவிழா தட்டுமால் கிராமத்தில் உள்ள காமராஜர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வரலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்தவிழாவில் மாநில மாணவர் வழிகாட்டி சிவ.முத்து ராஜா முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டி மகிழ்ந்தார். கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பரிசு பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர் என ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:இனி டிசம்பர் மாதத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி.. பபாசி அறிவிப்பு!