சென்னை:மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கல்லீரல் பிரச்சினை சம்பந்தமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த பிப்.28ஆம் தேதி காலை 7.50 மணியளவில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சாந்தன் உடலை, அவரின் தாயகமான இலங்கைக்கு அனுப்பவும், அவரின் பயண ஆவணங்களை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சரிபார்த்து அனுப்பி வைக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று இரவு (பிப்.29) சாந்தனின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு, மருத்துவமனையில் இருந்து இலங்கை கொண்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து சரக்கு விமானம் மூலம் உடலை இலங்கை கொண்டு செல்வதற்கான நடைமுறைகள் அனைத்தும் இன்று காலை செய்து முடிக்கப்பட்டு, இன்று (மார்ச் 1) காலை 9.40 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், சாந்தனின் உடல் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.