தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அலட்சியப்படுத்தாமல் எங்களது சிரமங்களையும் புரிந்து கொள்ளுங்கள்" - தூய்மை பணியாளர்கள் கோரிக்கை! - SANITARY WORKERS DEMAND

தீபாவளியை முன்னிட்டு மதுரையின் 4 மாசி வீதிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை முழு வீச்சில் அகற்றி வரும் தூய்மை பணியாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் படும் சிரமங்களை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

sanitary workers problems  Madurai diwali crackers waste  diwali crackers waste  தூய்மை பணியாளர்கள்
தூய்மை பணி (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 1:04 PM IST

மதுரை:மதுரையின் இதயப் பகுதியாக திகழும் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள மாசி வீதிகள், வணிக முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமன்றி, போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகவும் உள்ளது. இப்பகுதிகளில் ஜவுளிக்கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது. அதனால் தீபாவளியை முன்னிட்டு, 4 மாசிவீதிகள் அனைத்தும் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவது வழக்கம்.

மதுரை மாவட்டம் மட்டுமன்றி தென் மாவட்டங்களில் இருந்தும் சாரை சாரையாக மக்கள் வருகை தந்து தங்களது குடும்பத்திற்கு தேவையான புத்தாடைகளை வாங்கிச் செல்வார்கள். ஆகையால், இந்த பகுதியில் கடும் நெருக்கடி நிலவும். குறிப்பாக தீபாவளியின் கடைசி 2 நாட்கள் லட்சக்கணக்கானோர் திரண்டு கடைசி நேரம் வரை கொள்முதலில் ஈடுபடுவார்கள். இதன் காரணமாக தீபாவளி முடிந்ததும் இந்த பகுதிகளில் சேரும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கும்.

தூய்மை பணியாளர் பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu)

அதனால், மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் இணைந்து இரவு பகலாக குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள். அதன் பொருட்டு, தீபாவளி அன்றும் கூட அவர்களுக்கு தூய்மை பணி நடந்து கொண்டிருக்கும். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி, கீழமாசி வீதி ஆகிய பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தீபாவளி நாளில் அதிகரித்த காற்று மாசு.. பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாற்ற வேண்டுமா? பூவுலகின் நண்பர்கள் கூறுவது என்ன?

இதுகுறித்து மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் முருகன் கூறுகையில், "தீபாவளி மட்டுமன்றி அனைத்து நாட்களிலும் எங்களது தூய்மை பணி இப்பகுதியில் நடைபெற்று கொண்டு தான் இருக்கும். இருப்பதிலேயே மிகவும் சிரமத்திற்குரிய பணி இதுதான். ஆகையால் பொதுமக்கள் எங்களை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் படுகின்ற கஷ்டங்களை பார்க்கும்போது எங்களோடு இந்த வேலை முடிந்து போகட்டும் எங்களுக்கு பிறகு வருகின்ற தலைமுறை எவரும் இந்த வேலையை செய்யக்கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள்.

தூய்மை பணியாளர்களுக்கு எல்லா உதவியும் அரசு செய்கிறது என்கிறார்கள். ஆனால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இதே பணியை தான் நானும் செய்து வருகிறேன். இப்படியே தான் நானும் இருக்கிறேன். என்னோடு பணிபுரியும் இந்த பெண்கள் அனைவரும் ஒப்பந்த பணியாளர்கள். எங்களை வேலையை வாங்குவதற்கு இந்த அரசாங்கம் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் தான் செய்கிறது.

இன்று காலையில் 6 மணிக்கு எங்களது பணி துவங்கியது, எப்போது முடியும் என்றே சொல்ல முடியாது. இங்கு டன் கணக்கில் சேர்ந்துள்ள இந்த குப்பைகளை அகற்றுவது என்பது மிகப்பெரும் பணியாகும். எங்கள் சுகாதார ஆய்வாளர் எப்போது பணி முடிகிறது என்று சொல்கிறாரோ அப்போதுதான் நாங்கள் செல்ல முடியும். பொதுமக்களைப் பொருத்தவரை நாங்கள் வைக்கும் வேண்டுகோள் தூய்மை பணியாளர்களை தயவு செய்து அலட்சியப்படுத்தாதீர்கள் என்பதுதான். எங்களின் பணியை நாங்கள் மேற்கொள்ளா விட்டால், நீங்கள் யாரும் சுத்தமாக இருக்க முடியாது. ஆரோக்கியமாகவும் வாழ முடியாது" எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் கூறுவையில், "தீபாவளி அன்றும் கூட எங்களால் குடும்பத்தோடு கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது. அப்போதும் தூய்மை பணிக்காக நாங்கள் வந்து விடுவோம். அரசும், மாநகராட்சி நிர்வாகமும் எங்களது நிலையை கணக்கில் கொண்டு சம்பளத்தை உயர்த்தி தர முன்வர வேண்டும். பொதுமக்களும் எங்களது கஷ்டங்களை அறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் வேண்டுகோள்" எனத் தெரிவிக்கின்றனர்.

பின்னர், இதுகுறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மதுரை மாநகராட்சி பொருத்தவரை நாள்தோறும் சராசரியாக 850 டன் குப்பைகள் அகற்றப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகையின் போது 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. நிரந்தர பணியாளர்கள் 1,300 பேர், தினக்கூலி பணியாளர்கள் 700 பேர், ஒப்பந்த பணியாளர்கள் 3,850 பேர், சுகாதாரப் பணியாளர்கள் 532 பேர் மட்டுமன்றி மாநகராட்சி பொறியாளர்கள் சார்பாக வார்டுக்கு 3 பேர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளனர்

ஈடிவி பாரத் தமிழ்நாடு (credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details