தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் நிறுவனத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூத்துக்குடி மாநகராட்சி முன்பு சாலையில் அமர்ந்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி தூய்மைப் பணியாளர்களுக்கு தினக் கூலியாக ரூ.725, ஓட்டுநர்களுக்கு ரூ.763, டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு ரூ.725 வழங்க வேண்டும், தூய்மை பணியில் கான்ட்ராக்ட் முறையை ரத்து செய்துவிட்டு தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.10 ஆயிரம் முன்பணம், கரோனா காலத்தில் பணி புரிந்ததற்காக சிறப்பு தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க: "எங்கள பணி நிரந்தரம் செய்யுங்க" தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக மாநகராட்சி கதவுகள் அடைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுனர். அதைத்தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், "தூத்துக்குடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகள் 15 நாட்களுக்கு முன்னரே கடிதமாக கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது, தீபாவளி போனஸ் உள்ளிட்டவற்றை முன்வைத்து, தங்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என தொழிலாளர்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாகவே, இந்த போராட்டம் நடைபெறும் எனத் தெரிந்தே, தொழிலாளர்களை உள்ளே செல்லவிடாமல் கதவுகளை அடைத்து வைத்துள்ளனர். இந்த செயலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்