தஞ்சாவூர்:கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வட்டங்களில், குப்பைகளை சேகரித்து, தரம் பிரித்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது இந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் 400 தூய்மை பணியாளர்கள் ரூபாய் 400 வீதம் தினக்கூலி அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.
இவர்களது பணிக்கு தேவையான கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கூட வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவரவர் வட்டங்களில் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்க கூறுவதுடன், பிற இடங்களில் இருந்து வேன் மற்றும் லாரிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி, அதையும் தரம் பிரிக்க வலியுறுத்துவதால் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிலான பணி மாலை 4 மணி வரை கூட நீடிப்பதாக தூய்மை தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பணிக்கான சம்பளமும் மாத தொடக்கத்தில் வழங்காமல் 20ஆம் தேதி தான் வழங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு சில மாதம் முன்பு ஒப்பந்தம் பெற்ற இந்த நிறுவனம், கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்க மறுத்து விட்டதாகவும், இவ்வாண்டு தீபாவளி போனஸ் கேட்டதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் தூய்மை பணியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் சொல்கின்ற வேலையை செய்யாவிட்டால், எங்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு, வடமாநில தொழிலாளர்களை கொண்டு வந்து பணியமர்த்துவோம் என தனியார் ஒப்பந்த நிறுவனம் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தனியார் நிறுவனத்தைக் கண்டித்து இன்று நூற்றுக்கணக்காண தூய்மை பணியாளர்கள் கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான காரனேசன் மருத்துவமனை வளாகத்தில் தங்கள் பணிகளை புறக்கணித்து முற்றுகையிட்டு அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.