தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தீபாவளிக்கு போனஸ்.. விரோதப்போக்கில் தனியார் நிறுவனம்” - கரூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! - SANITARY WORKERS PROTEST IN KARUR

கரூரில் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், தீபாவளி போனஸ் வழங்காத தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும் என தூய்மை தொழிலாளர் அணியின் மாநிலத் தலைவர் தி.க.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம், தி.க.பாண்டியன்
தூய்மை பணியாளர்கள் போராட்டம், தி.க.பாண்டியன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2024, 9:07 AM IST

கரூர்: கரூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், விடுமுறை உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் போக்கை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு கண்டம் தெரிவித்து, பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையின் சார்பில், பேரவையின் மாவட்டச் செயலாளர் பசுவை.பாரதி தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் நேற்று (அக்.24) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தூய்மை தொழிலாளர் அணியின் மாநிலத் தலைவர் தி.க.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினார்.

தி.க.பாண்டியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆர்ப்பாட்டத்தில், சாமானிய மக்கள் நலக்கட்சி கரூர் மாநகரச் செயலாளர் தென்னரசு, தந்தை பெரியார் திராவிடர் கழக கரூர் மாவட்டத் தலைவர் தனபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் நிர்வாகி அரசப்பன் மற்றும் தோழமை அமைப்புகள் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கோரிக்கை:கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் ராமலிங்கம், மாடியில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அவரது மருத்துவச் செலவை கரூர் மாநகராட்சியும், ஒப்பந்த தனியார் நிறுவனமும் ஏற்க வேண்டும். கரூர் மாநகராட்சி, தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ள தூய்மைப் பணி ஒப்பந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:"தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்" - தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை!

பின்னர், தூய்மைத் தொழிலாளர் அணியின் மாநிலத் தலைவர் தி.க.பாண்டியன் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், “கரூர் மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்கள் விடுமுறை எடுத்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்வது, தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினால், அவர்களை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட தொழிலாளர் விரோதப்போக்கை தனியார் ஒப்பந்த நிறுவனம் செய்து வருகிறது.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர் ராமலிங்கம் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு மாநகராட்சி நிர்வாகமும், தனியார் ஒப்பந்த நிறுவனமும் இதுவரையில் எந்த உதவியும் செய்யவில்லை. எனவே, தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை, சம்பள உயர்வு, தீபாவளி போனஸ் உள்ளிட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாத தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும். இதற்கு கரூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை ஆதித்தமிழர் பேரவை முன்னெடுக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details