கோயம்புத்தூர்:கோவை மாநகராட்சியில் 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கங்களின் சார்பில் தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து போனஸ் பேச்சுவார்த்தை தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது தூய்மை பணியாளர்களை ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனம் நான்காயிரம் ரூபாய் போனஸ் தருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்காமல் தூய்மை பணியாளர்கள் கடந்த வாரம் அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் போலீசார் கைது செய்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சுவாமிமலை வளாகத்தில் தூங்கிய பக்தர்கள்! தண்ணீர் ஊற்றி விரட்டியதாக குற்றச்சாட்டு; அதிகாரி விளக்கம்!
இந்நிலையில் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் மேற்கொண்டனர். இதில் மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும், தனியார் நிறுவனம் தன்னிச்சையாக செயல்பட்டு நிர்ணயித்த போனஸ் தொகையை ரத்து செய்துவிட்டு பேச்சுவார்த்தை மூலம் போனஸ் தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை, இஎஸ்ஐ, கூடுதல் பணிக்கு கூடுதல் சம்பளம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அது மட்டுமின்றி தூய்மை பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு விடாமல், ஒப்பந்த தூய்மை பணிகளை மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தினர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்