சென்னை:கொல்கத்தா மற்றும் கிருஷ்ணகிரி பாலியல் சம்பவங்களை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த நவீன நங்கையர் பவுண்டேஷன் சார்பில் நடிகை சனம் ஷெட்டி நேற்று மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு வாரத்திற்கு நான்கு வழக்குகள் வருகிறது. கொல்கத்தா மற்றும் கிருஷ்ணகிரியில் 13 மாணவிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே அதில் குற்றவாளியாக இருக்கிறார். பெங்களூரில் இரு சக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவிகளை பூனேவில் கழிவறையில் வைத்து அந்த பள்ளியில் இருக்கும் பணியாளர்களே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பெண்களை பாதுகாப்பாக உடை அணியுங்கள், என சொல்லிக் கொடுங்கள் என கூறும் நீங்கள், ஆண் பிள்ளைகளுக்கும் சற்று கற்று கொடுங்கள் என அவர் கூறினார். அதற்கான ஒரு பணிகளை முன்னெடுத்து தான் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளோம். இப்போது இருக்கும் பாதுகாப்பு போதாது என்பதை வலியுறுத்தும் வகையில், தண்டனை கடுமையாக வழங்க வேண்டும், உடனடியாகவும் கொடுக்க வேண்டும், பிறகு பெண்களை தொடுவதற்கு பயப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
மேலும், போராட்டத்துக்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை 29ம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம் என அனுமதி கேட்டிருந்தோம், ஆனால், வேறு ஒரு தினத்திற்கு மாற்றம் செய்து தருவதாக கூறி இருக்கிறார்கள் என கூறிய அவர், காவல்துறையின் உதவி இல்லாமல் இந்த போராட்டத்தை எங்களால் நடத்த முடியாது. எல்லோரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும். ஆண், பெண் என பிரித்து பார்க்க கூடாது எனவும், இந்தியாவில் மட்டும் தான் இது நடக்கிறதா? உலகம் முழுவதும் இதே பிரச்சினை தான் எங்கும் பாதுகாப்பில்லை எனவும் அவர் கூறினார்.