சாம்சங் துணை நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம்: போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்? - SAMSUNG EMPLOYEES PROTEST
சாம்சங் துணை நிறுவனத்திற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை தவிர்த்து, திட்டமிட்ட நாளில் அமைதி வழியில் வேறு போரட்டத்தை நவம்பர் 30ஆம் தேதி நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாம்சங் ஊழியர்கள் போராட்டம், சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப் படம்) (ETV Bharat Tamil Nadu)
சென்னை: சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில், ஈடுபட்ட சாம்சங் துணை நிறுவனமான எஸ்.எச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 91 ஊழியர்களின் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை என்பதால், அதனால் சாம்சங் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் தவிர்த்து பிற போராட்டங்களில் ஈடுபடலாம் என ஏற்கனவே உத்தரவிட்டருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (நவம்பர் 21) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிற்சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி அளித்து வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளது என்றும், ஜனநாயக ரீதியாக உரிமைக்காக அறவழியில் போராட அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் அனுமதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் முன்பு வேறு வகையான போராட்டம் நடத்துவதற்கு சாம்சங் ஊழியர்கள் ஒப்புக்கொண்டதை ஏற்று காவல்துறை அனுமதி அளித்து விட்டதாக தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வேல்முருகன், நவம்பர் 30ஆம் தேதி தாலுக்கா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தவிர்த்து, பிற வடிவத்தில் அமைதி வழியில் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் QR குறியீடு (ETV Bharat Tamil Nadu)