மதுரை : பிரபல ஆன்மீக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் இன்று( நவ 10) மதுரையில் காலமானார். இவரது உடலுக்கு பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மதுரை டிவிஎஸ் நகர் அருகே சத்யாசாய்நகர் 4வது குறுக்குதெருவில் மனைவி ராதா, மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார். பிரபல எழுத்தாளரும், ஆன்மீக சொற்பொழிவாளருமான இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சாலமன் பாப்பையா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இவர் புராணங்கள் இதிகாசங்களை கற்பனை கதைகளோடு கலந்து எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார். இவருடைய கதைகள் பொதுவாக அமானுஷ்ய, தெய்வீகம், மறுபிறவி, பேய்கள் போன்ற விஷயங்களை உள்ளடக்கியவை இருக்கும்.இவரது மறைவு பொதுமக்களிடையே மட்டுமன்றி, எழுத்தாளர்கள், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் மர்ம தேசம், சொர்ண ரேகை, விடாது கருப்பு போன்ற புகழ்பெற்ற கதைகளை எழுதியுள்ளார்.
இதையும் படிங்க :டெல்லி கணேஷ் மறைவு: முதலமைச்சர் உருக்கம்; அரசியல் தலைவர்கள் அஞ்சலி!
படைப்புகள் : இவரின் படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வந்துள்ளன. இவர் 700 சிறுகதைகள், 340 நாவல்கள் மற்றும் 105 தொடர்களை எழுதியுள்ளார். சிருங்காரம், ஆனந்தபுரத்து வீடு, இருட்டு ஆகிய திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மறைந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் உடலுக்கு பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா நேரில் அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "இந்திரா சௌந்தர்ராஜன் இன்னும் இலக்கியத்துறை, எழுத்துக்கு ஆற்ற வேண்டிய பணி இருக்கிறது. அவரது இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருடனும் நன்கு பழக கூடியவர். எந்த தலைப்பிலும் பேசக்கூடியவர். பெரிய மனிதராக தன்னை காட்டிக் கொள்ளமாட்டார்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்