சேலம்:சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியினை, சேலம் மாவட்டம் வருவாய் அலுவலர் மேனகா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கெங்கவல்லி, நடுவலூர், திம்மநாயக்கன்பட்டி, நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
இந்த போட்டி ஆறு சுற்றுகளாக பிரிக்கப்பட்டு, சுற்றுக்கு 50 பேர் என மாடுபிடி வீரர்கள் களத்தில் பங்கேற்று, காளைகளை அடக்கினர். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக, கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கினர். அதேபோல், சுகாதாரத் துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி சான்றிதழ் வழங்கினர். இதன் பின்னரே போட்டி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியைக் காண தம்மம்பட்டி, புதூர், நாகியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மேலும் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், போட்டி நடைபெற்று கொண்டு இருக்கும்போது, காளை அடக்குவதில் மாடுபிடி வீரர்களுக்கும், மாடு உரிமையாளர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறின்போது ஜல்லிக்கட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தேங்காய் நாரில் திடீரென மர்ம நபர்கள் தீ பற்ற வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயைப் பரவாமல் அணைத்தனர்.