தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

9-ம் வகுப்பு மாணவரின் வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சம்.. பதறிய ராஜஸ்தான் நபர்.. சேலத்தில் நடந்தது என்ன? - Salem student

சேலத்தில் பள்ளி மாணவர் வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை வங்கி மேலாளரிடம் திருப்பி ஒப்படைத்த சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

பணத்தை ஒப்படைத்த பள்ளி மாணவன் மற்றும் அவரது தந்தை
பணத்தை ஒப்படைத்த பள்ளி மாணவன் மற்றும் அவரது தந்தை (Credit - ETV Bharat Tamil Nadu)

சேலம்:கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது காசிம். இவரது மகன் முகமது அர்ஷத். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், இவரது வங்கிக் கணக்கிற்கு கடந்த பிப்ரவரி மாதம் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வந்துள்ளது. மாணவனுக்கு பணம் வந்தது குறித்து எதுவும் தெரியாது என கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் மாணவரின் தந்தையைத் தொடர்பு கொண்டு, "ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அமித் மேங்கன் என்பவர் உங்களது மகன் வங்கிக் கணக்கிற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தவறுதலாக அனுப்பி உள்ளார். அந்தப் பணத்தை உடனடியாக உரியவர்களிடம் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இதன் அடிப்படையில், வங்கி மூலம் சம்பந்தப்பட்ட நபருடைய தொலைபேசி எண்ணைப் பெற்ற மாணவரின் தந்தை, அமித் மேங்கனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, 'தவறுதலாகப் பணத்தை தான் பணம் அனுப்பிவிட்டதாகவும், 2.5 லட்சம் ரூபாயை மீண்டும் தனது வங்கி எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பைக்கை கண்டுபிடிச்சு கொடுத்தா ரூ.10 ஆயிரம் பரிசு.. தாய் பாசத்தில் தவிக்கும் மதுரை மாநகராட்சி ஊழியர்!

அதன் அடிப்படையில் மாணவரின் தந்தை, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என வங்கி மேலாளரிடம் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து வங்கி மேலாளர் மூலம் பணத்தை தவறுதலாக அனுப்பியவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து மாணவரின் தந்தை கூறுகையில், “கடந்த 7 மாதத்திற்கு முன்பு எனது மகனுடைய வங்கிக் கணக்கில் 2.5 லட்சம் ரூபாய் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கணக்கில் கூகுள்-பே, போன்-பே போன்ற எந்த ஒரு செயலியும் இல்லாததால் பணம் வந்தது குறித்து எந்த ஒரு தகவலும் எங்களுக்கு தெரியவில்லை.

அதேபோல், பணத்தை தவறாக அனுப்பியவர் பல நாள்களாக வங்கியைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து உள்ளார். தற்போது நிறைய ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடைபெறுவதால், வங்கி அதிகாரிகள் இதற்கு உரிய பதில் அளிக்காமல் இருந்துள்ளார். தொடர்ந்து அவர்கள் தொடர்பு கொண்டதன் விளைவாக வங்கி மேலாளர் அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போதுதான் பணத்தை தவறாக அனுப்பியது உண்மை என தெரியவந்தது. தற்போது அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துவிட்டோம்" என தெரிவித்தார். மாணவர் மற்றும் அவரது தந்தையின் இந்த செயல் அனைவரது மத்தியிலும் பாராட்டைப் பெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details