சேலம்:பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், பாதிப்புகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலில், குரங்கு சாவடி பகுதியில் உள்ள அரைஸ் மழலைக் குழந்தை பள்ளியின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாணவ மாணவிகள், பொதுமக்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தூக்கி எறியும் பொழுது அதனை விலங்குகள் எடுத்து உட்கொள்கின்றன. இதனால் விலங்குகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு நாடகத்தையும் அரங்கேற்றினர்.
தொடர்ந்து செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும் பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தின் அடையாளங்களை பதாகைகளாக கழுத்தில் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், பிளாஸ்டிக் வகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வாட்டர் பாட்டில் ஆடை, பிளாஸ்டிக் கவர்களால் உருவாக்கப்பட்ட ஆடை, குளிர்பானம் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட ஆடை என பத்துக்கும் மேற்பட்ட ஆடைகளை அணிந்து பேஷன் ஷோ வடிவில் நடந்து வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர் . மாணவ மாணவிகளின் இந்த விழிப்புணர்வு அங்கு கூடியிருந்த மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.