சேலம்:சேலத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பல்வேறு முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரும் நாட்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த 10 நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரியைக் கடந்து மக்களை வாட்டி வருகிறது.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இந்திய அளவில் பதிவான வெப்ப அளவில், சேலம் இரண்டாவது இடத்திலும், இன்றைய தினம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 108 டிகிரியைக் கடந்து வெப்பத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது. இந்திய அளவில் சேலம் மூன்றாவது இடத்தில் அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுமக்கள் தேவை இன்றி நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும், அதிக நீர் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எளிமையான டிப்ஸ்! - Summer Safety Tips