சேலம்: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு இன்று (ஜன.21) நடைபெறுகிறது. இதனையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக துணை பொதுச் செயலாளரும், மகளிர் அணி செயலாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திமுக கொடியேற்றி வைத்தார்.
இதனையடுத்து, மாநாட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் உருவச் சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து, திமுக இளைஞரணியின் மாநில மாநாடு, இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதனையொட்டி, மாநாட்டின் தலைவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார். இதில்,
- தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
- இட ஒதுக்கீடு கொள்கை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
- மத்திய பொதுப் பட்டியலில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
- ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தினை வழங்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரே செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மேலும், ஆளுநர் பதவி என்பதை நிரந்தரமாக நீக்க வேண்டும்.
- மாநில சுயாட்சி அடிப்படையில், மாநில அரசுகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும்.
- அமலாக்கத் துறையின் மூலம் எதிர்கட்சியினரை பழிவாங்கும் போக்கையும், நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் போக்கையும் கண்டிப்பது.
- நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களிடையே மீண்டும் வாக்கு பெறுவதற்காக மதவாத அரசியல் மேற்கொள்வதை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.