தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் பதவியை நீக்க தீர்மானம் - சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முன்மொழிந்தார் உதயநிதி ஸ்டாலின்! - பொது பட்டியலில் மருத்துவம்

Salem DMK Youth conference: ஆளுநர் பதவியை நீக்க வேண்டும், முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தராக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் குறித்து சேலம் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Minister Udhayanidhi Stalin speech at Salem DMK Youth conference
சேலம் திமுக இளைஞரணி மாநாடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 11:05 AM IST

Updated : Jan 21, 2024, 12:19 PM IST

சேலம்:தமிழக ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு பிரமாண்டமாக இன்று (ஜன.21) தொடங்கியது. இந்த திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி கொடியேற்றி தொடங்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து விழா மேடையில் மாநாட்டின் தீர்மானங்களை முன் மொழிந்து பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், 'ஆளுநர் பதவியை நீக்க வலியுறுத்தியும், முதலமைச்சரே பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்க வேண்டும், கல்வியை மாநில பட்டியலில் மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்களை நிறைவேற்றினார். திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

  • ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிடுக:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில்லாத மாநில அரசுகளை, நியமனப் பதவியான ஆளுநர் பதவியைக் கொண்டு செயல்படவிடாமல் தடுக்க முயற்சித்து, ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்துவதற்குத் திட்டமிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கினைக் கண்டிப்பதுடன், ஆளுநர் பதவி என்ற `தொங்கு சதை’யை நிரந்தரமாக அகற்றுவதே, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வு என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
  • முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தர்:கல்வியில் மதவாதம், வெறுப்புணர்வு, நிர்வாகத்தில் ஜனநாயக விரோதம்-ஊழல் ஆகியவைத் தொடர்ந்து கொண்டிருப்பதால், தமிழ்நாட்டின் செம்மையான உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி நீடிக்க, 'பல்கலைக்கழக வேந்தர்'எனும் உயர் பொறுப்புக்கு, நியமனப் பதவியில் உள்ள ஆளுநருக்குப் பதிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதலமைச்சரே தகுதியானவர் என்பதால், 'பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர்' செயல்படுவார் என்கிற தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை இளைஞர் அணி ஆதரிப்பதுடன், அதனை விரைந்து நிறைவேற்றிட, இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
  • மாநிலப் பட்டியலுக்குக் கல்வி, மருத்துவத்தை மாற்றுக:நீட் தேர்வு, முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடங்களுக்கான இடஒதுக்கீடு, தேசிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தி ஆதிக்கம் என பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்திலும் ஒன்றிய அரசின் ஆதிக்கம் நீடிப்பது என்பது அந்தந்த மாநிலத்தின் மொழி, பண்பாடு, திறன் மேம்பாடு ஆகியவற்றை சிதைக்கும் நோக்கத்தில் இருப்பதாலும், இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேரெதிரானது என்பதாலும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியையும் மருத்துவத்தையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கான சட்ட வழிமுறைகளை இளைஞர் அணி முன்னெடுக்கும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
  • தமிழ்நாட்டை முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக்கிய முதலமைச்சர்: தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு 2024-ஐ வெற்றிகரமாக நடத்தி, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் பரவலான முதலீடுகள் பெருகவும், பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்திடவும் வழிவகைக் கண்டு, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நோக்கி, முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டைப் புதிய பாய்ச்சலுடன் முன்னேறிடச் செய்யும், முதலமைச்சர் அவர்களுக்கு, இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
  • நிதி நெருக்கடியிலும் மகிழ்ச்சிப் பொங்க வைத்த பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடும் வகையில் அரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய தொகுப்புடன் 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கி, மாநில அரசின் கடுமையான நிதி நெருக்கடிச் சூழலிலும் மக்களின் முகங்களில் மலர்ச்சியை ஏற்படுத்திய முதலமைச்சருக்கு இந்த மாநாடு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.
  • உயிர்பலி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது: 'நீட் விலக்கு-நம் இலக்கு' என்ற முழக்கத்துடன் கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களின் முதல் கையெழுத்துடன் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நேரடியாகவும் ஆன்லைனிலும் நடத்தி, 50 லட்சம் கையெழுத்துகளுக்கும் அதிகமாகப் பெற்று மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியது. நீட் ஒழிக்கப்படும் வரை சட்ட வழியிலான போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கொடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொடூர மனப்பான்மையை இந்திய அளவில் அம்பலப்படுத்தி, நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றியை முழுமையாகப் பெற்றே தீரும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
  • அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கைப்பாவையாக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்:பா.ஜ.க. அல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீதும், பா.ஜ.க.வை எதிர்க்கின்ற கட்சிகள் மீதும் வன்மத்துடன் பாய்ச்சுகின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியல் போக்கிற்கும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலை எடுத்தால், அவர் மீதான வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ‘தூய்மைப் பட்டம்’ அளிக்கும் ‘வாஷிங் மெஷின் பா.ஜ.க.’ அரசின் இரட்டை வேட செயல்பாடுகளுக்கும் இந்த மாநாடு வன்மையானக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.
  • நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான சூளுரை: திமுக இளைஞர் அணி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் முன்னின்று செயலாற்றி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுகவின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, ‘ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்’ என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் எனச் சூளுரைக்கிறது' என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Last Updated : Jan 21, 2024, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details