தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் - ஏற்காடு பிரதான சாலையில் மண்சரிவு; "போக்குவரத்துக்கு தடை" - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - SALEM COLLECTOR

சேலம் - ஏற்காடு பிரதான சாலை 2வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதன் விளைவாக, அனைத்து விதமான போக்குவரத்திற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நிலச்சரிவினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
நிலச்சரிவினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2024, 10:30 PM IST

சேலம் : ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக, ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையில் சேலம் மாவட்டத்தில், தொடர் மழை பெய்து வருவதால் சேலம் - ஏற்காடு பிரதான சாலையில் மண் சரிவு ஏற்பட்ட 2வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியினை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஏற்காட்டில் கடந்த இரண்டு நாள்களில் 144.4 மில்லி மீட்டர், 238 மில்லி மீட்டர் என தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் திடீர் நீர்வீழ்ச்சி ஏற்பட்டு ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகியுள்ளன. மலைப்பாதை வழியாக வழிந்தோடும் தண்ணீரும், தொடர் மழையும் ஒன்று சேர்ந்து ஏற்காடு மலைப்பாதையில் மண் அரிப்பை ஏற்படுத்தியதால் ஏற்காடு மலைப் பகுதிகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, ஏற்காடு பிரதான சாலை 2வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதன் விளைவாக தற்காலிகமாக வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்காடு பிரதான சாலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறையினர் ஒருங்கிணைந்து ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சீரமைப்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று, ஒருசில இடங்களில் கல்வெட்டுப் பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் வடிந்து செல்கிறது. இதனை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் சாலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு வாகனப் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும்.

எனவே, ஏற்காடு சாலையில் தற்காலிகமாக அனைத்து விதமான போக்குவரத்தினையும் நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, நெடுஞ்சாலைத்துறையின் கண்காணிப்புப் பொறியாளர் சசிக்குமார், கோட்டப் பொறியாளர் முத்துக்குமரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details