சேலம்:சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இரா.பிருந்தா தேவி இன்று (ஜன. 29) காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர், "பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில், அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில், மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்” என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 412 மனுக்கள் பெறப்பட்டன.