சேலம்: குழந்தை திருமணங்களைத் தடுத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கூறுகையில், "குழந்தை திருமணச் சட்டம் 2006ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் குழந்தை திருமணமாகும். இது போன்ற குழந்தை திருமணம் செய்யப்படுவதால், குழந்தைகளின் எதிர்காலம், நல்வாழ்வு, உடல் நலம், கல்வி ஆகியவை கிடைக்காமல் குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடப் பெரிதும் வாய்ப்பாக அமைகிறது. குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அவர்களின் பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு அலுவலர்களாக மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள், விரிவாக்க மற்றும் ஊர் நல அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது.
மேலும், தற்பொழுது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தங்கள் பகுதிகளில் குழந்தை திருமணம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால், அதனோடு தொடர்புடையவர்களுக்கு 2 வருடம் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி, கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தை திருமணத்திற்கு மிக முக்கியமான காரணமாக பள்ளி இடைநிற்றல் ஒரு காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியர்களின் பள்ளி இடைநிற்றல் விவரங்களை மாவட்ட சமூக நல அலுவலரிடம் வழங்கி பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி, பள்ளிப் படிப்பை தொடரச் செய்வதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம் தொடர்பான தகவல்களை 1098, 151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட சமூக நல அலுவலரை 0427-2413213, 91500-57631 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் சுகந்தி, கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர் சௌண்டம்மாள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:"இது ஒரு புரியாத புதிர்.. ஜெயக்குமார் விவகாரத்தில் சதி”.. கே.வி.தங்கபாலு பிரத்யேக பேட்டி! - KV Thangkabalu On Jayakumar Death