தமிழ்நாடு

tamil nadu

சென்னை டூ மஸ்கட்; சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு இன்று முதல் புதிய நேரடி சேவை தொடக்கம்! - Chennai to Muscat SalamAir flight

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 1:36 PM IST

SalamAir flight service in Chennai: சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு சலாம் ஏர் விமானம் மூலம் இன்று முதல் வாரத்தில் இரண்டு முறை இயங்கும் புதிய நேரடி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை டூ மஸ்கட் வரை நேரடி விமான சேவை தொடக்கம்
சென்னை டூ மஸ்கட் வரை நேரடி விமான சேவை தொடக்கம் (Credits - Chennai (MAA) Airport 'X' Page)

சென்னை:ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை இதுவரையில் ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மட்டுமே நடத்தி வந்தது. ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் காலை மற்றும் மாலை ஒவ்வொரு விமான சேவை வீதம், தினமும் இரண்டு விமான சேவைகளை, மஸ்கட்- சென்னை- மஸ்கட் இடையே இயக்கி வருகிறது.

இது தவிர மற்ற விமான நிறுவனங்கள் நேரடி விமான சேவைகளை நடத்தாமல், சென்னையில் இருந்து மும்பை வழியாக மஸ்கட்டுக்கு விமான சேவைகளை இயக்கி வருகின்றன. ஆனால், பயணிகள் நேரடி விமானத்தில் பயணம் செய்யவே விரும்புவதால், ஓமன் ஏர்லைன்ஸ் விமானங்கள் எப்போதும் நிரம்பி வழிகிறது. அதில், டிக்கெட் கிடைப்பது கடினமாக உள்ளது.

அதோடு பாரீஸ், லண்டன், பிராங்பேர்ட் உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களுக்கு, இணைப்பு விமானங்களும், மஸ்கட்டில் இருந்து இருப்பதால், மஸ்கட் - சென்னை - மஸ்கட் விமானங்களில், எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

சென்னை டூ மஸ்கட்டுக்கு சலாம் ஏர் விமானம்:இந்த நிலையில் ஓமன் நாட்டில் உள்ள சலாம் ஏர் விமான நிறுவனம், மஸ்கட் - சென்னை - மஸ்கட் இடையே, புதிய நேரடி விமான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது. வாரத்தில், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் இயக்கப்படும், இந்த சலாம் ஏர் விமானம், மஸ்கட்டில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4:15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு, மஸ்கட் புறப்பட்டு செல்கிறது.

இன்று முதல் நாளில் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 179 பயணிகளும், சென்னையில் இருந்து மஸ்கட் சென்ற விமானத்தில் 142 பயணிகளும் பயணித்தனர். இந்த விமானத்தின் பயண நேரம் 3 மணி 46 நிமிடங்கள். இப்போது வாரத்தில் இரண்டு தினங்கள் இயக்கப்படும் இந்த விமான சேவைகள், பயணிகளின் வரவேற்பை பொறுத்து, தினமும் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் இருந்து மஸ்கட்டிற்கு கூடுதலாக விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வாரத்தில் இரண்டு தினங்கள் இயக்கப்படும் இந்த சலாம் ஏர் விமான சேவைகள், தினசரி சேவைகளாக மாற்றப்பட வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:பாலியல் சீண்டலால் சிஐஎஸ்எப் வீரரை அறைந்தாரா ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர்! என்ன நடந்தது? - Spicejet Employee Slap CISF

ABOUT THE AUTHOR

...view details