தஞ்சாவூர்:திருவையாற்றில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆராதனை இசை நிகழ்ச்சி இன்று (ஜன.18) நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தினர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜர் திருவாரூரில் பிறந்து, திருவையாற்றில் வாழ்ந்து, திருவையாறு காவிரிக்கரையில் 1847ஆம் ஆண்டு முக்தி அடைந்தார்.
அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள், கர்நாடக சங்கீத உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி கர்நாடக இசைப்பிரியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். கர்நாடக இசைப்பிரியர்களால் இவர் அதிகளவில் ஆராதிக்கப்பட்டவர்..
இதன் பொருட்டு தியாகராஜரை நினைவு கூறும் வகையில் திருவையாற்றில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா சார்பில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு தியாகராஜரின் 178வது ஆராதனை விழா ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி தினமும் பல்வேறு இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ’பஞ்சரத்ன கீர்த்தனை’ இசை அஞ்சலி செலுத்தும் விழா நடைபெற்றது. இதில் இசைக் கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், இசை ரசிகர்கள் ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகங்களை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள்.
இசை கலைஞர்கள் பேட்டி (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:கரூரில் களை கட்டிய ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டி! பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
இவ்விழாவில் இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, ஓ.எஸ்.அருண், ரமணி என ஏராளமானோர் கலந்து கொண்டு இசை அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, தியாகராஜர் உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனையும் காட்டப்பட்டது. இவ்விழாவில் தியாக பிரம்ம மகாசபை தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பேசிய இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், “இந்த விழாவில் பங்குபெற்று, பாடியதில் மிகுந்த மகிழ்ச்சி. இதுவரை நடைபெற்ற அனைத்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை விட இந்த ஆண்டு மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது. மன அமைதி கிடைத்துள்ளது. எளிமையாக அனைவரும் இடம் பெறும் வகையில் நெரிசல் இல்லாமல் இருந்தது" என்றார்.
இதையடுத்து, பேசிய இசைக் கலைஞர் மஹதி, “தொடர்ந்து 16 ஆண்டுகளாக நான் இந்த பஞ்சரத்ன கீர்த்தனைக்கு வந்துக்கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலக முழுவதும் உள்ள இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து இங்கு தியாகராஜரின் 178வது ஆராதனை விழா பாடியது மிகுந்த சிறப்பு வாய்ந்தது. எனது தந்தையான சொந்த ஊர் இது என்பதால், இந்த நிகழ்வில் பங்குபெறுவதை கடமையாக நினைத்து ஆண்டுதோறும் பங்கு பெறுவேன்” என்றார்.
இது குறித்து பேசிய இசைக் கலைஞர் எஸ்.ஜே ஜனனி, “நான் இருபது ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று பாடுகிறேன். இங்கு வந்து பஞ்சரத்ன கீர்த்தனை பாடுவதை நாம் எனது பாக்கியமாக பார்க்கிறேன்” என்றார்.