நாகப்பட்டினம்: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த 3ஆம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று(பிப்.14) சாம்பல் புதன் துவங்கியது. இதையொட்டி உலகப் புகழ் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலை நடைபெற்றது.
பேராலயத்தில் நடைபெற்ற 40 நாள் தவக்காலம் சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். வழக்கமாக, கிறிஸ்தவர்களின் நெற்றியில் பூசப்படும் விபூதியாக சாம்பல் பூசப்பட்டு 40 நாள் தவக்காலத்தைப் பங்குத் தந்தைகள் தொடங்கி வைத்தனர்.
தவக்காலம் என்பது மன மாற்றத்திற்கான காலமாகக் கருதப்படுகிறது. மனதிற்கு ஏற்ப பாவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மனம் திரும்ப வேண்டிய காலம். மனிதனின் சுய ஆய்விற்கான காலம். இதற்கு அடையாளம் தான் நெற்றியில் பூசப்படும் சாம்பல். சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம். இதில் உண்ணா நோன்பு என்பது காலம்காலமாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.
இதையும் படிங்க:ஒரே நாடு ஒரே தேர்தலை திரும்பப் பெற தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தாக்கல்!