தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக நிதி செலவழித்த தமிழ்நாடு அரசு.. ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்! - TN govt sent migrant workers - TN GOVT SENT MIGRANT WORKERS

COVID 19 period TN govt sent migrant workers at their own expense: பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்பட்ட ஷ்ராமிக் ரயில்களுக்கு தமிழ்நாடு அரசே ரயில்வேக்கு பணம் செலுத்தியுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

rti-information-said-tn-govt-sent-migrant-workers-at-covid-period-to-home-states-by-train-at-their-own-expense
கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்ப ரயில் கட்டணம் செலுத்திய தமிழக அரசு - ஆர்டிஜ தகவல் கூறுவது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 9:20 PM IST

மதுரை: பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்ல ரயில்வே துறை ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை, பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் இயக்கியது.

இந்த ரயில்களில் பயணம் செய்ய நேரடியாக பயணிகள் அல்லது தனிநபர்களின் குழுக்கள் அனுமதிக்கப்படவில்லை. "யாரும், எந்தவொரு சூழ்நிலையிலும், ரயில்களைத் தேடும் நோக்கில் ரயில் நிலையங்களுக்கு வரக்கூடாது என்றும், ரயில் நிலையங்களில் எந்தவொரு தனிநபருக்கும் எந்தவொரு டிக்கெட்டையும் வழங்க மாட்டோம் என ரயில்வே துறை அறிவித்திருந்தது. மாநில அரசு அதிகாரிகள் யாரைக் கொண்டு வருகிறார்களோ, அந்த பயணிகளை மட்டுமே ரயில்களில் ஏற அனுமதிக்கப்பட்டது.

இது மட்டுமில்லாமல், ரயில்கள் இயங்குவதற்கு குறைந்தது 90 சதவீத இருக்கைகள் நிரம்பியிருக்க வேண்டும். இதுபோன்ற ரயில்களின் டிக்கெட்டுகளை உள்ளூர் மாநில அரசு அதிகாரிகளால் ஒப்படைத்து, டிக்கெட் கட்டணத்தை வசூலித்து மொத்த தொகையை ரயில்வேயிடம் ஒப்படைக்கும் என்று ரயில்வே தெரிவித்தது. இந்த சிறப்பு ரயில்களை சாதகமாகப் பயன்படுத்த விரும்பும் மக்கள், தங்கள் மாநில அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்னர் புலம்பெயர்ந்தோர் உள்ளூர் போலீஸ் நிர்வாகத்திடம் இருந்து தகவல்களைப் பெற வேண்டும். எழுத்துப்பூர்வமான விண்ணப்பத்திற்குப் பிறகு பதிவு செய்ததும், சம்பந்தப்பட்ட அதிகாரி தனிப்பட்ட அல்லது பயணிகளின் குழுவுக்கு தரவை தயார் செய்வார். பின்னர் அதிகாரிகள் பயணிகளின் பட்டியலைத் தயாரித்து, ரயில்வேயில் ஒப்படைப்பார்கள், அதன் அடிப்படையில் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படும். பட்டியலில் பயன்பாடு அல்லது பெயர் இல்லாமல் எதுவும் பயணிக்க அனுமதிக்கப்படாது.

இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் குறித்து தகவல் அறியும் சட்டம் வாயிலாக ஆர்.டி.ஐ ஆர்வலரும், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகியுமான பாண்டியராஜா தகவல்களைப் பெற்றுள்ளார். இதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பின்வருமாறு,

முதல் ரயில்:தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து முதல் ரயிலாக 2020ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி எர்ணாகுளத்திலிருந்து புவனேஸ்வருக்கு ரயில் இயக்கப்பட்டது. கடைசி ரயிலாக சென்னை சென்ட்ரலிலிருந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி பீகார் மாநிலத்தில் உள்ள தேனாப்பூர் என்ற ஊருக்கு இயக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 268 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களும், கேரளாவிலிருந்து 190 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களும், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கர்நாடகாவிலிருந்து 21 ரயில்களும், புதுச்சேரியிலிருந்து 3 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதிலும் இருந்து 4,621 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தெற்கு ரயில்வே மண்டலத்தில் மொத்தம் 507 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, 7,35,418 பயணிகள் பயணம் செய்து 66 கோடியே 28 லட்சத்து 66 ஆயிரத்து 825 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில், தமிழ்நாட்டிலிருந்து 265 ரயில்கள் இயக்கப்பட்டு, 3,54,150 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த பயணிகளுக்கு பயணச்சீட்டு முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்திலிருந்து 34 கோடியே 60 லட்சத்து 93 ஆயிரத்து 845 ரூபாய் ரயில்வே துறைக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களிருந்து தோராயமாக 433 கோடி ரூபாய் வருவாய் ரயில்வே துறைக்கு கிடைத்துள்ளது.

இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்கான கட்டணம் முன்பதிவு கட்டணம் இல்லாமல் உள்ள இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டியின் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கு, இதற்குப் பதிலாக முன்பதிவு இல்லாத சாதாரண பெட்டிகளில் பயணம் செய்யும் கட்டணத்தை வசூலித்திருந்தால் பயணக் கட்டணம் வெகுவாக குறைந்திருக்கும்.

கரோனா காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் விபரம்:

ரயில்கள் இயக்கப்பட்ட ஊர்கள் ரயில்களின் எண்ணிக்கை
சென்னை சென்ட்ரல் 77
திருப்பூர் 34
கோயம்பத்தூர் 34
திருவள்ளுர் 22
சென்னை எழும்பூர் 15
மதுரை 11
ஈரோடு 10
காட்பாடி 9
செங்கல்பட்டு 8
சேலம் 6
திருச்சி 6
திருநெல்வேலி 5
தஞ்சாவூர் 4
கன்னியாகுமரி 3
நாகர்கோவில் 3
மேட்டுபாளையம் 3
தூத்துக்குடி 2
ராதநாதபுரம் 2
கரூர் 2
திண்டுக்கல் 2
காஞ்சிபுரம் 2
நாமக்கல் 1
விழுப்புரம் 1
விருதுநகர் 1
அரக்கோணம் 1
ஜோலார்பேட்டை 1
மொத்தம் 265

தமிழ்நாட்டில் இருந்து வசூல் செய்த ரயில்வே:இந்த ரயில்களில் பயணம் செய்ய பயணிகளுக்கு கட்டணத்தை தமிழ்நாடு அரசு தங்கள் நிதியிலிருந்து ரயில்வே துறைக்குச் செலுத்தியது. இந்த நிதியில் எந்த ஒரு கட்டணக் குறைப்போ, இலவச டிக்கெட்டோ, முதியோர் பயண கட்டணச் சலுகையோ இல்லாமல், முழு கட்டணத்தையும் ரயில்வே துறை தமிழ்நாடு அரசிடமிருந்து வசூலித்தது. இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் ஆகும்.

தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்பட்ட 265 சிறப்பு ரயில்களில் ஒரே ஒரு ரயிலுக்குத்தான் தமிழ்நாடு பயணக் கட்டணம் செலுத்தாமல் உத்தரகாணட் மாநிலம் பயண கட்டணத்தைச் செலுத்தியுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்ட ரயில்களில் பல்வேறு ரயில்களுக்கு பங்கீடு முறையில் பயணக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்பட்ட ரயில்களில் தமிழ்நாடு ஒரே ஒரு ரயிலைத் தவிர, மற்ற அனைத்து ரயில்களுக்குக் கட்டணத்தை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்டாக செயல்பட்ட பிற மாநிலங்கள்:பிற மாநிலங்கள் ஸ்மார்ட் ஆக, மாநில வாரியாக பயணிகள் பட்டியலைத் தயார் செய்துவிட்டு, அங்கு உள்ள மாநிலங்களுக்குத் தகவல் கொடுத்து, உங்கள் மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் இவ்வளவு நபர்கள் இங்கு உள்ளனர். அவர்களை அனுப்ப வேண்டி ரயில்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்குத் தேவையான கட்டணத்தை உங்கள் மாநிலம் செலுத்த வேண்டும் என்று அவசர தகவல் கொடுத்து, அவர்களிடமிருந்து கட்டணத்தை ரயில்வேக்குச் செலுத்த வைத்து, ரயில்களில் புலம்பெயர் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, ரயில்களில் ஏற்றி விடும் பணியை செய்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு அதிகாரிகள் இவ்வாறு செய்யாமல், அனைத்து பயணச்சீட்டுக்கான நிதியை தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து செலுத்தி உள்ளனர். இது தமிழ்நாடு அரசின் நிதிச்சுமையில் மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிதிச்சுமை, வரியாக தமிழக மக்கள் இனி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் பற்றிய தகவல்களை அறியும் போது மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு மொத்தம் சுமார் 7,35,418 வடமாநிலத் தொழிலாளர்கள் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இது ரயில்களில் பயணம் செய்தவர்கள் பட்டியல் ஆகும்.

இது இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், விமானத்தில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் ரேசன்கார்டு வாங்கி இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்ட தொழிலாளர்கள் பற்றிய விவரங்கள் ஒன்றுமே இல்லை. இவ்வாறு தங்கியவர்கள் குறித்து பட்டியல் எடுத்தால் இன்னமும் அதிகரிக்கும்.

இதையும் படிங்க:மதிமுக பம்பரம் சின்னம் விவகாரம்; நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - MDMK Symbol Issue

ABOUT THE AUTHOR

...view details