மதுரை: தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரே ஆண்டில் ஆதிதிராவிட மாணவர்கள் 25 பேர் உதவித்தொகை அடிப்படையில் அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய பல்கலைக்கழகங்களில் முனைவர் படிப்புக்கு (PhD) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிடப்பில் போடப்பட்ட நிதி: இதற்கு முன்பு 2012 - 2013 கல்வியாண்டு முதல் 2019 - 2020 கல்வியாண்டு வரை கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து 18 ஆதிதிராவிட மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்க விண்ணப்பித்திருந்த நிலையில், வெறும் 3 பேர் மட்டும் இத்திட்டத்தில் பயனடைந்திருந்தனர். ஆனால், இத்திட்டத்திற்காக ரூ.2 கோடியே 65 லட்சத்து 83 ஆயிரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில், ரூ.1 கோடியே 66 லட்சத்து 79 ஆயிரம் மட்டுமே செலவிடப்பட்டிருந்த நிலையில், மீதி ரூ.99 லட்சத்து 4 ஆயிரம் பயன்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் நிதி ஒதுக்கீடு:இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் செ.கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்த தகவலை வெளிக்கொண்டு வந்தது மட்டுமல்லாமல், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு இதுகுறித்து புகார் மனு ஒன்றை அனுப்பினார். அதுமட்டுமின்றி, உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
அதன் எதிரொலியாக கடந்த 2022 - 2023 கல்வியாண்டில் 9 மாணவர்கள் பிரிட்டன், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கத் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக ரூ.5 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்சமயம் 2023 - 2024ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆதிதிராவிடர் மாணவர்கள் 25 பேர் உதவித்தொகை அடிப்படையில் அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் பிஎச்டி படிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இத்திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ.8.94 கோடி நிதி ஒதுக்கி, அதரூ.7.93 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்:இதுகுறித்து சமூக ஆர்வலர் செ.கார்த்திக் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு தொலைபேசி வாயிலாக பகிர்ந்த தகவலில், "தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மாணவர்கள் வெளிநாடுகளில் பிஎச்டி பட்டப் படிப்பினை மேற்கொள்வதற்காக 40 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், ஒரே ஆண்டில் 25 ஆதிதிராவிட மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைந்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால், டெல்லி மற்றும் கர்நாடக மாநிலங்களில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால், இத்திட்டம் குறித்து அரசு கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: "விதைகளை பாதுகாக்காமல் வேளாண்மையை எப்படி காப்பாற்ற முடியும்?" - விவசாயிகள் ஆதங்கம்!