தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விக்கிரவாண்டியில் சாதி பிரச்சாரம் செய்தவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது' - ஆர்.எஸ்.பாரதி பேச்சு! - RS Bharathi on Vikravandi results - RS BHARATHI ON VIKRAVANDI RESULTS

RS Bharathi on Vikravandi by election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதியை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ். பாரதி (கோப்புப்படம்)
ஆர்.எஸ். பாரதி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 4:47 PM IST

Updated : Jul 13, 2024, 5:52 PM IST

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இந்தியாவில் எந்த கட்சியும் பெறாத வெற்றியை மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக பெற்றுள்ளது. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற அளவில் முழுமையான வெற்றியைப் பெற்றோம். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எந்த அரசும் சந்திக்காத சவால்களை திமுக சந்தித்தது.

கள்ளக்குறிச்சியில் மிகப்பெரிய சோகம் நிகழ்ந்தது. மத்திய அமைச்சர்கள் உட்பட இந்திய அளவில் இப்பிரச்சினை பூதாகரமாக பேசப்பட்டது. இதனை வைத்து இடைத்தேர்தலின் வெற்றியை முடக்கிவிட வேண்டும் என்று மற்ற கட்சியினர் முயற்சித்தனர். சென்னையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. இதனை அரசியல் பிரச்சினையாக்க முயற்சித்தனர். இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு இடையே இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசின் மூன்று ஆண்டு ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சவால்களுக்கு மத்தியில் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. திமுகவிற்கு சோதனை வரும் போதெல்லாம் தொண்டர்கள் வெகுண்டெழுவார்கள். இடைத்தேர்தலில் சாதியை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

கால் வைத்த இடத்தில் எல்லாம் வெற்றியை தேடித்தந்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி. கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கட்சியினர், பத்திரிகைகள் என அனைவரும் திமுகவிற்கு நெருக்கடி கொடுத்தனர். இவற்றை அனைத்தையும் தாங்கிக் கொண்டு நாம் தற்பொழுது வெற்றி பெற்றுள்ளோம். விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டு இருக்கும்'' என்றார்.

இதையும் படிங்க:"உதயநிதி துணை முதல்வராவதை மக்கள் விரும்புகிறார்கள்"- மனோ தங்கராஜ் பேச்சு!

Last Updated : Jul 13, 2024, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details