சென்னை:இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தேசியக்கொடி ஏற்றினார். பின்னர், அங்கு கூடியிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதனைத் தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி, "தேசிய கீதம் பாடப்படும் பொழுது அந்த தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கிறதா இல்லையா? திராவிடம் பிடிக்கவில்லை என்று சொல்லும் ஆளுநர், அந்த திராவிடம் என்ற சொல்லை எடுத்துவிட்டு தேசிய கீதம் பாட வேண்டும். ஆனால், அவ்வாறு பாடினால் தேசிய கீதத்தை அவமதித்த வழக்கில்தான் உள்ளே போவார்.
எந்த அரசியல் கட்சி அலுவலகத்திலும் இல்லாத அளவிற்கு சுதந்திர தினத்தன்று அண்ணா அறிவாலயத்தில் தான் மக்கள் கூடியுள்ளனர். திமுகவின் தேசப்பற்றுக்கு யாரும் சான்றிதழ் கொடுக்கத் தேவையில்லை. நாங்கள் இந்த நாட்டைக் காப்பாற்றியவர்கள், காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள், இது எங்கள் நாடு, இந்த நாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.