தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக சார்பில் 2 ஆண்கள் மட்டும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்? - ஆர்.எஸ்.பாரதி விளக்கம்! - RS Bharathi

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில், ஒவ்வொருவரும் தலா 10 பேரை குடிப்பதிலிருந்து மனமாற்றம் செய்வோம் என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 6:49 AM IST

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது, “ நம்முடைய எதிரிகள் அனைவரும் தற்போது வயிற்றெரிச்சலோடு இருக்கிறார்கள். அவர்கள் உடல் உபாதை காரணமாக பல மருத்துவமனைகள் சென்றதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அவர்கள் வயிற்றெரிச்சல் படபட இந்த கூட்டணி என்றென்றும் ஒற்றுமையாகவே இருக்கும்.

அதனை நிரூபிக்கும் வகையில் தான் அனைவரையும் ஒன்று கூட்டி திருமா இப்படிப்பட்ட ஒரு மகத்தான மாநாட்டை கூட்டியிருக்கிறார். மாநாட்டிற்கு மற்ற கட்சிகளின் சார்பில் மகளிர் வந்துள்ளனர். ஆனால், திமுக சார்பில் இரண்டு ஆண்கள் மட்டுமே வந்துள்ளோம். நானும், டிகேஎஸ் இளங்கோவனும். இது எதைக் காட்டுகிறது என்றால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திருமாவளவனுக்கும் இருக்கும் நெருக்கத்தையும், தொடர்பையும் யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்பதையே காட்டுகிறது.

இங்கு பேசிய அனைத்து தலைவர்களும் மதுவினால் ஏற்படும் கொடுமைகள் குறித்து பேசினர். இதில் கருத்து வேறுபாடு இல்லை. 'மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அது பிரசாரத்தில் வெற்றி பெற வேண்டும் எனச் சொன்னால், மக்கள் மத்தியில் எழுச்சி உண்டாக வேண்டும்' என 1971-ல் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றால், அதனை தள்ளி வைக்க வேண்டும் என கருணாநிதி கூறினார். அன்றைய கட்சியின் பொருளாளார் எம்ஜிஆர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து, அந்த குழு நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யும் எனக் கூறினார்.

அந்த முடிவினை திருமாவளவன் இன்று கையில் எடுத்துள்ளார். இங்கு வந்திருக்கும் ஒவ்வொரு மகளிரும், இளைஞரும் திருமாவளவன் முன்னிலையில் ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும். ஒவ்வொருவரும் தலா 10 பேரை குடிப்பதிலிருந்து மனமாற்றம் செய்வோம் என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கடைகள் தானாக மூடப்பட்டுவிடும். குடும்ப கட்டுப்பாடு என்றால் பாவம் என ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் கருதப்பட்டது. அரசியல் மாநாட்டை நடத்தி விடலாம். ஆனால், மதுஒழிப்பு மாநாடு என்பதை நடத்த, அதுவும் பெண்களை வைத்து நடத்த துணிச்சல் வேண்டும். அத்தகைய துணிச்சலோடு மாநாட்டை ஏற்பாடு செய்த திருமாவளவனை திமுக சார்பில் பாராட்டுகிறேன்.

மேலும், நான் திருமாவளவனை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் கல்லூரியில் பயிலும் போதே பார்த்துக் கூறினேன். இந்த இளைஞர் ஒரு நாள் மிகப்பெரிய கூட்டத்தை உருவாக்கும் சொந்தக்காரனாக ஆவார் என்று, அதனை இன்று திருமா கூட்டி விட்டார் என்று இந்த நேரத்தில் நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details