தூத்துக்குடி: சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கியதோடு, அரிவாளுடன் ஹோட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அரிவாளுடன் சாலையில் அட்டகாசம் செய்த அந்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (45). இவர் கோவில்பட்டி - கடலையூர் நெடுஞ்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே ஒத்தக்கடை என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி மதன்குமார் என்பவர் அடிக்கடி வந்து சாப்பிட்டுச் சென்றுள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹோட்டலுக்கு வந்து 700 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை ரவுடி மதன்குமார் கஞ்சா போதையில் மீண்டும் ஒத்தக்கடை ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த ஹோட்டல் பணியாளர்களிடம், சொடக்கு போட்டு இரண்டு புரோட்டாவும், ஒரு ஆம்லேட்டும் பார்சல் கேட்டுள்ளார்.
அப்போது கடை உரிமையாளர், பழைய பாக்கியான 700 ரூபாயைக் கொடுத்தால் மட்டுமே புரோட்டா தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி, கடை உரிமையாளரிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். தொடர்ந்து, அங்கிருந்து சென்ற அவர், சற்று நேரத்திலேயே திரும்பி வந்து சட்டைக்குப் பின்னால் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து, ஓட்டலில் இருந்த 6 சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி, கேமரா ஹார்ட் டிஸ்க் கேபிள் வயர்களை அறுத்து எரிந்துள்ளார்.