திருவள்ளூர்:சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இவர்களில் சில மாணவர்கள் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ‘ரூட்டு தல’ என கூறப்படுகிறது.
இதனையடுத்து, மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தாலும், அவர்களின் எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். இந்த நிலையில், நேற்று பிற்பகல் சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. அதில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநிலக் கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவர்கள் பயணம் செய்துள்ளனர்.
மின்சார ரயிலானது பட்டரவாக்கம் ரயில் நிலையம் வந்தபோது, அங்கு ஏற்கனவே கற்கள், பீர் பாட்டில்களுடன் காத்திருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். இதையடுத்து மாநிலக் கல்லூரி மாணவர்களும் பதிலுக்குத் தாக்கத் தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தால் ரயில் மற்றும் நடைமேடையில் நின்று கொண்டிருந்த பயணிகள் பீதி அடைந்தனர். இதில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.