சென்னை:சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் ராமசாமி நகரில் அம்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பகுதியை சேர்ந்த எழை எளிய மக்கள் பலர் அங்கு வந்து உணவருந்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த அம்மா உணவகத்தில் பணிபுரியும், பெண் ஊழியர்கள் நேற்று இரவு, உணவகத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
பின் இன்று காலையில் அம்மா உணவகத்திற்கு வந்த ஊழியர்கள், உணவகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின் உடைக்கப்பட்ட உணவகத்தின் உள்ளே சென்று, பார்த்தபோது கேஸ் சிலிண்டர், 3 சீலிங் பேன், மற்றும் 10 கிலோ சமையல் எண்ணெய், துவரம் பருப்பு போன்ற பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். அதனையடுத்து அந்த அம்மா உணவகத்தின் அருகில் இருந்த சர்வ சக்தி வினை தீர்க்கும் விநாயகர் கோயிலில், வைக்கப்பட்டிருந்த, இரண்டு உண்டியலை உடைத்து, அதற்குள் இருந்த காணிக்கை பணத்தையும், மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, உடனடியாக அவர்கள் அருகில் இருந்த சாத்தாங்காடு போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விரைந்து, சம்பவ இடத்திற்கு வந்து, அம்மா உணவகம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராகளை கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனர்.