சிவகங்கையில் சடலத்துடன் உறவினர்கள் சாலைமறியல் சிவகங்கை:காரைக்குடி தெய்வராயன் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சில வருடங்களுக்கு முன்பாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் இங்கு கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக, அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகமணி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மதுபோதையில் ஆறுமுகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த ஆறுமுகம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து, ஆறுமுகத்தின் பெற்றோர்கள் காரைக்குடி தெற்குகாவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரில் அடிப்படையில், சந்தேக மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கூறி, இறந்த ஆறுமுகத்தின் உடலை, இடையர் தெரு நான்கு ரோடு சந்திப்பில் வைத்து உறவினர்கள் நேற்று (வியாழன்கிழமை) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், காரைக்குடி தெற்கு காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், ஆறுமுகத்தின் உறவினர்கள் ஆறுமுகத்தை தாக்கிய சண்முகமணி மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு காவல்துறையினர், ஆறுமுகத்தின் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்பு தான் சண்முகமணியின் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளனர்.
இதனால், ஆறுமுகத்தின் உறவினர்கள், அவரது உடலை பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் அடக்கம் செய்வோம் எனக் கூறியதால், காவல்துறையினர் ஆறுமுகத்தின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இதையும் படிங்க:இன்று 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு! எந்தெந்த தொகுதிகளில் யார்.. யார்.. போட்டி? முழு விபரம்! - Lok Sabha Election 2024