மதுரை:கை துடைக்க பயன்படுத்தப்படும் டிஷ்யூ பேப்பரில் எழுதப்பட்டு கிடைத்த மனு மீது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக நடவடிக்கை எடுத்த சம்பவம் குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அக்ஷய் சட்னலிவாலா என்ற தொழில் அதிபர் டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். அதே விமானத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணம் மேற்கொண்டார்.
இதனை அறிந்த அக்ஷய் சட்னலிவாலா, உடனே கை துடைக்கும் பேப்பரில் (Tissue Paper) அவரது கம்பெனியின் திடக்கழிவு பொருட்களை ரயில் மூலம் அனுப்ப உதவி செய்ய வேண்டும் என மனு கொடுத்தார். மத்திய ரயில்வே அமைச்சர் உடனடியாக கிழக்கு ரயில்வே பொது மேலாளரை அழைத்து தகுந்த உத்தரவுகள் பிறப்பித்தார்.
தொழில் அதிபர் அக்ஷய் விமானத்தில் இருந்து கொல்கத்தாவில் இறங்குவதற்கு ஆறு நிமிடங்களுக்கு முன்பாகவே கிழக்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து திடக்கழிவு பொருட்களை ரயில் மூலம் அனுப்புவது சம்பந்தமாக எப்பொழுது ஆலோசிக்கலாம் என அலைபேசி வாயிலாக கேட்கப்பட்டது.