தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனின் கார் மோதி இருவர் படுகாயம்! - Rishivandiyam dmk MLA car accident - RISHIVANDIYAM DMK MLA CAR ACCIDENT

Rishivandiyam DMK MLA Car Accident: தரங்கம்பாடி அருகே ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் வந்த கார் மோதி விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கார்
விபத்துக்குள்ளான ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 1:47 PM IST

மயிலாடுதுறை: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், காரைக்கால் சென்றுவிட்டு மீண்டும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வழியாக (இனோவா கிரிஸ்டா) காரில் சென்றுகொண்டிருந்தார்

அப்போது, தரங்கம்பாடி அருகே என்.என்.சாவடி அருகே சென்றபோது, காளியப்பநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலக சாலையில், எருக்கடாஞ்சேரியைச் சேர்ந்த கொத்தனார் மணிகண்டன்(18) மற்றும் 12ஆம் வகுப்பு மாணவன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் (ஹோண்டா ஆக்டிவா) தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக ஏறித் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

அப்போது சாலையில் அதிவேகமாக வந்த எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனின் கார், இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீது மோதியது மட்டுமல்லாமல், சாலையோரம் இருந்த கார்த்தி என்பவரின் வீட்டின் கேட் மீது மோதி போர்டிகோவில் புகுந்தது.

அதில், போர்டிகோ பகுதி மற்றும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக் என அனைத்தும் சேதமடைந்துள்ளது. மேலும், இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மணிகண்டனுக்குக் கால் மற்றும் உடலில் பல பகுதியில் காயமும், பள்ளி மாணவனுக்கு வலது முழங்காலுக்கு கீழ் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அவ்வழியாக வந்த மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, காயமடைந்த நபர்களை மீட்டு தான் வந்த அரசு வாகனத்தில் பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விபத்தில் கார் மோதி சேதமடைந்த வீட்டின் உரிமையாளர் கார்த்தி பொறையார் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இருச்சக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 'ப்ரொபஷனல் கில்லர்ஸ்'.. யார் இந்த கூலிப்படையினர்? எப்படி உருவாகிறார்கள்? விவரிக்கும் வழக்கறிஞர்!

ABOUT THE AUTHOR

...view details