தஞ்சாவூர்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அரிசி ஆலை அரவை முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப்.20) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யும் நெல்லை அந்தந்த மாவட்டங்களில் இருப்பு வைக்காமல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. வெளி மாவட்டங்களுக்கு நெல்லை அனுப்பி வைப்பதால் அரவை முகவர்களும், அரவை ஆலை தொழிலாளர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
அதேபோல், டெல்டா மாவட்டத்தில் நெல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பா பருவத்தில் டெல்டா மாவட்டங்களில் இதுவரை 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குடோன்களில் 1.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டு அரவை ஆலைகளில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களுக்குக் கூடுதல் செலவு செய்து அனுப்பப்பட்ட நெல்லின் அளவு 3 லட்சம் மெட்ரிக் டன் ஆகும் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.