தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரிசி மூட்டைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.15 லட்சம்.. தெரியாமல் விற்ற மச்சான் - கடலூரில் பரபரப்பு!

கடலூரில், திருடனுக்கு பயந்து கடை உரிமையாளர் அரிசி மூட்டையில் பணம் மறைத்து வைத்திருந்தது தெரியாமல், பணமிருந்த மூட்டையை அவரது உறவினர் விற்பனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர்  Cuddalore  அரிசி கடை  wrongly sale rice with money
கடலூர் அரிசி கடை (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 1:58 PM IST

Updated : Oct 24, 2024, 3:43 PM IST

கடலூர்:கடலூரில் திருடனுக்குப் பயந்து கடை உரிமையாளர், அரிசி மூட்டையில் வசூல் பணம் ரூ.15 லட்சத்தை மறைத்து வைத்திருந்தது தெரியாமல், விற்பனையாளர் அதனை விற்பனை செய்ததாகவும், அதனை திருப்பிக் கேட்டபோது இவ்வளவு தான் இருந்தது என ரூ.10 லட்சத்தை மட்டும் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், வடலூர் ராகவேந்திரா சிட்டியில் வசிப்பவர் சண்முகம் (40). இவர் வடலூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில்," வடலூர்- நெய்வேலி மெயின் ரோட்டில் பல ஆண்டுகளாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். நேற்று எனது கடையில் பணத்தை பத்திரமாக பாதுகாக்கும் பொருட்டு, 15 லட்ச ரூபாய் பணத்தை அரிசியை வைத்து மறைத்து சாக்குப்பையில் வைத்திருந்தேன்.

நான் (சண்முகம் ) கடையில் இல்லாத நேரத்தில், எனது மைத்துனர் சீனிவாசன் அரிசிக் கடையில் இருந்தார். அப்போது மந்தாரக்குப்பம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (62) என்பவர் அரிசி வாங்க வந்தார். அவர் 10 கிலோ அரிசி கேட்ட காரணத்தால், சீனிவாசன் சிறிதளவு அரிசி இருந்த மூட்டையில் கூடுதலாக அரிசியை அளந்து போட்டு, 10 கிலோ விற்பனை செய்துள்ளார்.

இதற்கிடையில் சில மணி நேரத்திற்குப் பின் சண்முகம் கடைக்கு வந்த போது, அங்கு பணத்துடன் இருந்த குறிப்பிட்ட அரிசி மூட்டை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். பின்னர், அந்த அரிசி மூட்டை எங்கே? என்று சீனிவாசனிடம் கேட்டபோது, வழக்கமாக நமது கடையில் அரிசி வாங்கும் பூபாலனிடம் மூட்டையை விற்பனை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை.. திருமணமான ஆறே மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு.. வெளியான பகீர் ஆடியோ!

அதனை கேட்டபின், "அந்த அரிசி மூட்டையில் தான் ரூ.15 லட்சத்தை மறைத்து வைத்திருந்தேன்" எனத் தெரிவித்துவிட்டு, சிசிடிவி காட்சிகள் மூலம் அவர்தான் அந்த அரிசி மூட்டையை வாங்கிச் சென்றாரா என உறுதி செய்து கொண்டுள்ளனர். பின்னர் பூபாலன் ஜி பே மூலம் பணம் செலுத்தியிருந்ததால், அவரது முகவரியை அதன் மூலம் கண்டு பிடித்து வீட்டுக்கு தேடிச் சென்றுள்ளனர்.

கடை உரிமையாளர் பேசும் வீடியோ (credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது அரிசி மூட்டை பிரிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டிலிருந்த பூபாலனின் மகளிடம், இந்த மூட்டையில் ரூ.15 லட்சம் வைத்திருந்ததாகவும், அதைக் கொடுக்குமாறும் சண்முகம் கூறியுள்ளார். அதற்கு அவரது மகள், அரிசி மூட்டையில் வெறும் ரூ.10 லட்சம் மட்டும் தான் இருந்ததாகக் கூறி அந்த பணத்தைக் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட சண்முகம், மீதமுள்ள ரூ.5 லட்சத்தை எங்கே என்று கேட்டதால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, சண்முகமும் சீனிவாசனும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, இதுகுறித்து வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில், போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் சண்முகம் கூறும்போது, "ஞாயிற்றுக்கிழமையன்று கலெக்‌ஷன் பணத்தை அரிசி மூட்டைக்குள் வைத்திருந்தேன். திருடன் பயத்தால் கல்லாவில் பணம் வைப்பது கிடையாது. மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது மூட்டை இல்லை. எனது மச்சான் தெரியாமல் விற்பனை செய்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, அரிசி வாங்கிய நபரிடம் சென்று கேட்டபோது, ரூ.5 லட்சத்தை எடுத்து வைத்துக் கொண்டு, ரூ.10 லட்சத்தை மட்டும் கொடுத்தார். எஞ்சிய பணத்தை கேட்ட போது, இவ்வளவு தான் எனத் தெரிவித்துவிட்டனர். எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.

சண்முகம் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் சி.எஸ்.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தினர். சண்முகத்தின் அரிசிக்கடையில் நடைபெற்ற விற்பனை தொடர்பான விவரங்கள், பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு போலீசார் கேட்டுள்ளனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் சண்முகம் கூறிய தொகை இருக்குமானால், பூபாலனிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 24, 2024, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details