திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் பொறுப்பேற்று ஓர் ஆண்டு ஆன நிலையில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக நெல்லை மாவட்டம் முழுவதும் பணிபுரியும் அரசு ஊழியர்களைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதாவது பொது மக்களுக்கு அரசு சேவை கிடைப்பதில் தாமதமாவதாகவும் பலருடைய மனுக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் புகார் வந்துள்ளது. எனவே மக்களின் மனுக்கள் மீதும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மீதும் உடனே நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் ஆட்சியரின் உத்தரவை மீறி பலர் தங்கள் பணியில் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் வருவாய்த் துறையில் பணியில் அலட்சியமாகச் செயல்பட்ட 10க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீது 17பி சட்டத்தின் கீழ் ஆட்சியர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த 17 சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் முதற்கட்டமாகச் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும். அப்போது அவர்கள் தாங்கள் தவறு செய்யவில்லை என ஆதாரப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அதே சமயம் ஊழியர்கள் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அதிகபட்சம் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை ஊதிய உயர்வு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆட்சியர் கார்த்திகேயன் நடவடிக்கையால் அதிர்ந்து போன நெல்லை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் தற்போது அவருக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்.20) நெல்லை ஆட்சியர் கார்த்திகேயனை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த் துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணிக்கு வந்திருந்தனர். அதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்களும் இன்று (பிப்.20) கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை ஈடிவி பாரத் சார்பில் பிரத்தியேகமாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட பேசியது. அப்போது, "வேலை செய்யாமல் ஓபி அடித்தால் வேறு என்ன செய்ய முடியும். வேலை செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை.
தொடர்ச்சியாக முறைகேட்டில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் குறித்த செய்திகளை நீங்களே பார்த்திருப்பீர்கள். அது போன்று பணியில் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகத் தான் இது போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பலர் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனப் புகார் வந்தது.
பத்து ஆண்டுகள் வரை ஃபைகல் தேக்கமடைந்து இருக்கிறது. இப்படி இருக்கையில் அது சம்பந்தமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேறு என்ன செய்வது. இது முதல் கட்டம் தான். தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். அப்போது அவர்கள் தவறு செய்யவில்லை என நிரூபித்தால் 17பி சட்டம் ரத்து செய்யப்படும். அதே நேரம் சிறப்பாகப் பணிபுரியும் ஊழியர்களும் இருக்கிறார்கள். ஆனால் வேலை செய்யாமல் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது இதுபோன்று நடவடிக்கை எடுத்தால் தான் மக்களுக்கு அரசு சேவை முறையாகக் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.