கோயம்புத்தூர்: கடந்த மார்ச் 25ஆம் தேதி நீலகிரியில் பாஜக, மற்றும் அதிமுகவினர் ஒரே நேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், போலீசார் தடியடி நடத்தியதில் பாஜகவினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
காயமடைந்த பாஜக தொண்டர்கள், கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காயமடைந்த பாஜக தொண்டர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த 25ஆம் தேதி நீலகிரியில், பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தோம். நாங்கள் மனுத் தாக்கல் செய்ய உள்ளே சென்றிருந்த நேரத்தில், காவல்துறை நடத்திய தடியடியில் முரளிதரன் என்பவர் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு, தலையில் அடிபட்டு சிகிச்சைக்காக பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு இடதுபுற மூளையில் அடிபட்டிருப்பதால், அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. திமுகவின் காவல்துறை பாஜகவின் தொண்டர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் கூட அன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த இருவர், நேற்று தான் உதகை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள்.
ஊட்டி காவல்துறை இங்கு ஐசியுவில் இருக்கும் நபருக்கு கூட தொல்லை கொடுத்திருக்கின்றனர். திமுக காவல்துறை இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி இருக்கும். பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது தான் காவல்துறை வேலை. ராசா வீட்டுக்கும், ஸ்டாலின் வீட்டுக்கும் வேலை செய்வதற்கு காவல்துறை இல்லை. காவல்துறை பொதுமக்களை பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.