சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் குறித்துஇந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று (மார்ச் 15) வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இந்த அவசர கூட்டத்தில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்குவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. ஆனால் அந்த அறிக்கை லெட்டர் பேடிலும் மன்சூர் அலிகான் புகைப்படம் இருந்தது தான் விந்தையாக இருந்தது. மிகச்சமீபத்தில் தான் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை சந்தித்து மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த மன்சூர் அலிகான், கண்ணதாசன் கட்சியின் பொதுச்செயலாளர் இல்லை என்றும் சமீபத்தில் அலுவலக ரப்பர் ஸ்டாம்ப், 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் போன்றவற்றை திருடிச் சென்றதாகவும் அவர்மீது குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியில் என்னதான் நடைக்கிறது என்ற குழப்பம் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கண்ணதாசன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். இதில், "இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று (மார்ச் 15) எனது தலைமையில் நடைபெற்றது. அதில் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி, அனைத்து அதிகாரங்களும் பொதுச் செயலாளருக்கே என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
மன்சூர் அலிகான் தன்னிச்சையான நபராக இருக்கிறார். ஒரு கட்சியின் கட்டமைப்புகளுக்கு கட்டுப்பட்டவராக அவர் இல்லை. அவரது முடிவுகளுக்கு கட்சி கட்டுப்பட வேண்டும் என்று நினைக்கிறார். எந்த விஷயத்திலும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதில்லை. மாற்றி மாற்றி பேசுகிறார். இதுகுறித்து அவரை பலமுறை தொடர்பு கொண்டும், அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.