கோயம்புத்தூர்: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கிராமப் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 15) கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில், கோவை சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காடம்பாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
காடம்பாடி மக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதில், சூலூர் விமானப்படை தளத்தைச் சுற்றி 4 கி.மீ தொலைவிற்கு கட்டிடம் கட்ட விமானப்படை தளத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் காடம்பாடி ஊராட்சி உள்ளது. இந்த கிராம ஊராட்சி குமாரபாளையம், செங்கத்துறை, காங்கேயம், பாளையம், கலங்கள் உள்ளிட்ட கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. இந்த கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் இந்திய விமானப்படைத் தளத்திற்குச் சொந்தமான சுற்றுச்சுவர் அமைந்துள்ளது. தற்போது, இந்த பகுதிகளில் புதிய குடியிருப்பு கட்டுமானங்கள் வருகிறது.
இந்த நிலையில், விமானப்படை தளத்தைச் சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு கட்டுமானங்கள் அமைக்க வேண்டும் என்றால், விமானப்படை தளத்தில் உத்தரவு பெற வேண்டும் என்று விமானப்படைத் தளம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நடைமுறை சிக்கல் அதிகம் இருப்பதாகவும், ஊராட்சியில் அனுமதி வாங்கும் நிலை இருக்கும்போது விமானப்படைத் தளத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்றால் சிரமமாக உள்ளது எனவும், இந்த நடைமுறை திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, காடம்பாடி ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இது தொடர்பாக காடம்பாடி ஊராட்சியைச் சேர்ந்த தங்கராஜ் கூறுகையில், “விமானப்படைத்தளம் அருகே நான்கு கிலோ மீட்டருக்கு கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றால், விமானப்படை தளத்திடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற நடைமுறை பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. விமானப்படை தளத்திற்குள் செல்ல வேண்டும் என்றால் பல நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. அவ்வாறு பின்பற்றினாலும், அனுமதி வாங்க வேண்டும் என்பது முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
எனவே, உடனடியாக இந்த நடைமுறையை திரும்பப் பெற வேண்டும். இதனால் நான்கு கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை ரத்து செய்யாவிட்டால், 4 கிராம ஊராட்சியில் உள்ள 25 ஆயிரம் நபர்களைச் சேர்த்து சாலை மறியல் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு தயாராக உள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:'முதல்வர் மருந்தகம்' முதல் படை வீரர்களுக்கு ரூ.1 கோடி கடன் உதவி வரை.. சுதந்திர தின விழாவில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்