வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதியில் மாற்றுத் திறனாளி ஐயப்ப பக்தர் ஒருவர் மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டுறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வத்தலக்குண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி போலீசார் மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்டனர்
குறுக்குப் பாதையில் செல்ல கூகுள் மேப் உதவிய நாடினார்:இதுதொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய வத்தலகுண்டு போலீசார், " மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், கர்நாடக நபர் மழையில் சிக்கிக் கொண்டிருப்பதால் அவரை சென்று காப்பாற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும்" கூறினர்.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. அலுவலகம் அளித்த மொபைல் எண் இருக்கும் இடத்தை டவர் மூலம் கண்டறிந்து, அங்கு சென்றுள்ளனர். பின்னர் அவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது கன்னடத்தில் பேசியுள்ளார். ஒருவழியாக அவர் பேசியதைப் புரிந்து கொண்டு சென்ற போது, கடும் மழைக்கு நடுவே மாற்றுத் திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தில் தவித்துக் கொண்டிருந்ததாக போலீசார் கூறினர்.
விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியைச் சேர்ந்த பரசுராமர் என்ற மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் என்றும் தனது வாகனத்தில் சபரிமலை சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்ததாகவும், விரைவாக ஊருக்கு செல்வதற்காக கூகுள் மேப்பைப் பார்த்து குறுக்குப்பாதையில் திரும்பியதால் சிக்கிக் கொண்தாகவும் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை இரவு 7 மணிக்கு வத்தலக்குண்டுவை அடுத்துள்ள எம்.வாடிப்பட்டி பகுதிக்குள் சென்றவர் தேசிய நெடுஞ்சாலையை தொடும் சாலையை தவற விட்டுவிட்டு சமுத்திரம் கண்மாய்க்கு செல்லும் சாலையில் சென்றுள்ளார். அங்குள்ள பாலத்தைக் கடந்தவர் எதிர்பாராத விதமாக கண்மாய் பகுதியில் இருந்த சேற்றில் வசமாக சிக்கி உள்ளார். இரவு நேரம் என்பதாலும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும் உதவிக்கு யாரும் வரவில்லை .