சென்னை: நாட்டின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடியரசு தின வரவேற்பு மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டார். தேநீர் விருந்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் உள்ள மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த விருந்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீ ராம், முன்னாள் ஆளுநர்கள் எம்.கே. நாராயணன்,
தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ,நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பத்ம விருது மற்றும் தேசிய திரைப்பட விருதுகளை பெற்றவர்கள், ஐ.ஏ,எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச் ராஜா, நடிகர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேநீர் விருந்தில் கலந்து கொண்டிருந்த அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த விருந்தில் கலந்து கொண்டிருந்த அனைத்து கட்சி நிர்வாகிகள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் ஆளுநர் ரவி அவர்களின் இருக்கைகளுக்கு நடந்து வந்து வணக்கங்களைத் தெரிவித்து வரவேற்றனர்.