விழுப்புரம்: ஜிஆர்பி தெருவில் வசித்து வந்தவர் ராஜா. இவருக்கு அஞ்சு என்கிற மனைவியும், இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ராஜா தனது மூத்த மகனுடன் விழுப்புரம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இயங்கும் கேண்டீனில் தினசரி சம்பளத்திற்காக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 10ஆம் தேதி வழக்கம் போல இரவு வேலை முடித்துவிட்டு ராஜா தான் வேலை செய்யும் கேண்டீனில் படுத்து உறங்கி உள்ளார்.
அங்கு இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட தாலுகா போலீசார் காலை 7.30 மணி அளவில் டாஸ்மாக் கேண்டினில் படுத்து உறங்கிய ராஜாவை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவரை விசாரணை என்கிற பெயரில் போலீசார் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், ராஜா இரவு நேரத்தில் 10 மது பாட்டில்களை வைத்து பிளாக்கில் விற்பனை செய்ததாகவழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறி அவரை சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளனர்.
இதனைதொடர்ந்து வீட்டிற்கு வந்த ராஜா, தன்னை போலீசார் பூட்ஸ் கால்களால் தாக்கியதாகவும் தற்போது நெஞ்சு வலி அதிகமாக இருப்பதாகவும் கூறி வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ராஜாவை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு மேற்கு காவல் நிலையத்திற்கு ராஜாவின் மனைவி அஞ்சுவை அழைத்துச் சென்ற காவலர்கள், உங்கள் கணவர் வீட்டிலேயே இறந்து விட்டதாக ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றதாகவும், அதன் பின்னர் அவசர அவசரமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ராஜாவின் பிரேதத்தை எடுத்துச் சென்று ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பிரேத பரிசோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.