தஞ்சாவூர்:கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக சாலை சந்திப்பில், இன்று (மே 4) திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பள்ளத்தைச் சீரமைத்து வருகின்றனர்.
கும்பகோணம் ஹாஜியார் தெரு, பழைய மீன் அங்காடி அருகேயுள்ள தஞ்சாவூர் - மயிலாடுதுறை பிரதான சாலையின் கீழே ஒன்றரை மீட்டர் ஆழத்தில், சாஸ்வதி பாடசாலை அருகேயுள்ள மாநகராட்சி பம்பிங் ஹவுஸ் முதல் கரிக்குளம் மாநகராட்சி குப்பை கிடங்கு வரை 700 எம்எம் அளவிற்கு கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த குழாயில் இன்று திடீரென வெடிப்பு ஏற்பட்டதால், 10 அடி நீளம் 5 அடி அகலத்திற்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், அப்பகுதியில் போக்குவரத்தை உடனடியாக தடை செய்தனர். மேலும், மாநகராட்சி பாதாளச் சாக்கடை மேற்பார்வையாளர் கிட்டா தலைமையிலான மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவயிடத்திற்கு வந்து, பொக்லைன் இயந்திர உதவியுடன் பாதாளச் சாக்கடை குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.