சென்னை:சென்னை, தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகரில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிடக் கோரி தூயமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதில் அளிக்கும் படி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "கடந்த 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த பகுதியில் 1,700 ஆக்கிரமிப்புக்கள் இருப்பதாகவும், சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த குடியிருப்புக்களை இடித்துவிட்டு மீண்டும் கட்டிக் கொடுக்க திட்டமிட்ட போதும், குடியிருப்பு வாசிகள் காலி செய்ய மறுத்து வருவதால் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்புக்கள் விரைவில் அகற்றப்படும்" என தெரிவிக்கப்பட்டு இருந்தது.