சென்னை:பள்ளிகள் திறக்கப்படும் நாள் முதல் அனைத்து பள்ளி கீழ் செயல்படும் சத்துணவு மையங்களிலும் தடையின்றி உரிய நேரத்தில் மதியஉணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், காலாவதியான உணவுப் பொருட்களை கண்டறிந்து உடன் அப்புறப்படுத்திட வேண்டும் என சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி அனுப்பி உள்ள கடிதத்தில், 2024.2025ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடித்து ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதனைத்தொடர்ந்தும் பள்ளிகள் திறக்கப்படும் நாள் முதல் அனைத்து பள்ளி கீழ் சத்துணவு மையங்களிலும் தடையின்றி உரிய நேரத்தில் மதியஉணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கிட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும்.
- கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் 2 நாட்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட மையப்பணியார்கள் சத்துணவு மையங்களுக்கு சென்று மையங்களை சுத்தம் செய்ய வேண்டும். இருப்பில் உள்ள காலாவதியான உணவுப் பொருட்களை கண்டறிந்து உடன் அப்புறப்படுத்திட வேண்டும்.
- குறிப்பாக எண்ணெய் முட்டை கொண்டைக்கடலை. பாசிபயறு போன்ற உணவுப் பொருட்கள் சமையல் செய்யும் நிலையில் தரமானதாக உள்ளதா என சரி பார்க்கப்பட வேண்டும்.
- ஜூன் 6 ந் தேதி முதல் தடையின்றி உரிய நேரத்தில் சத்துணவு சமைத்து வழங்க ஏதுவாக அனைத்து சத்துணவு மையத்திலும் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர் சமையலர் மற்று சமையல் உதவியாளர்கள் பணிகளை செய்ய வேண்டும்.
- அனைத்து பள்ளிகளின் சமையற் கூடங்களும் தூய்மை செய்யப்பட வேண்டும். பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் பன்ளி துவங்கும் நேரத்திற்கு தொடங்குவதற்கு முன்பாகவே சத்துணவு மையங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- 45 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களுக்கான தேவைப்பட்டியல் சேமிப்புக்கிடங்கு அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்து, உணவுப்பொருட்கள் இருப்பு இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
- ஏற்கனவே பெறப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் இருப்பு இருப்பின் அதனை குறைத்து 45 நாட்களுக்கான தேவைப்பட்டியல் ஒப்படைப்பு செய்திட வேண்டும்.
- சமையல் பணியின் போது உபயோகிக்கும் நீர் தூய்மையான குடிநீர் என்பதை சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பரிசோதித்தப் பின்னர் மட்டும் சமையல் பணிக்கு உபயோகித்திட வேண்டும்.
- வேகவைத்த முட்டைகளை உரித்துப்பார்த்து நல்ல நிலையில் உள்ளது என்பதை தலைமையாசிரியர், பொறுப்பாசிரியர்கள் உறுதி செய்த பின்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
- அனைத்து சத்துணவு மையங்களையும் முன்னேற்பாடாக சுத்தம் செய்து, சமையல் பாத்திரங்கள் மற்றும் தட்டு, டம்ளர் ஆகியவுற்றையும் சுத்தம் செய்து உலர வைத்து நல்ல நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
- 1 முதல் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியர்களில் மதிய உணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முட்டை தேவைப்பட்டியல் அளித்திட வேண்டும். பள்ளி திறக்கப்படும் நாளிலிருந்து முட்டையுடன் கூடிய மதிய உணவு தயார் செய்து அனைத்து பள்ளி சத்துணவு மையங்களிலும் வழங்கப்பட வேண்டும்.