திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த மலையடிபட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (39). இவரது மகன் பொன்மாறன் (4). கடந்த 10ம் தேதி கழுத்தில் கட்டியிருப்பதாக கூறி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொன்மாறன் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அச்சிறுவனை ஸ்கேன் எடுக்க அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுவனுக்கு லேப் டெக்னீசியன் ஒருவர் ஊசிப்போட்டதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர் மருத்துவக்கல்லூரி முதல்வர் அறை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நீதி கிடைக்க நடவடிக்கைஎடுப்பதாக தெரிவித்த நிலையில் தற்காலிகமாக அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக நெல்லை மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து சிறுவனின் உறவினர் சூரிய பிரகாஷ் நமது செய்தியாளரிடம் கூறியதாவது;
உறவினர் குற்றசாட்டு
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலில் சிறுவனை பரிசோதித்த போது கழுத்தில் சிறிய கட்டி தான் இருக்கிறது, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் ஊசி மூலமாக கரைத்து விடுவார்கள் அல்லது சின்ன அறுவை சிகிச்சை செய்வார்கள் என்று கூறினார்கள். அதை நம்பி இங்கு வந்தோம். நேற்று காலை (பிப்.12) ஸ்கேன் எடுக்கும் போது போதிய அனுபவம் இல்லாத பயிற்சி பெறும் நபர் சிறுவனுக்கு ஊசி போட்டார். ரொம்ப அழுத்தத்தோடு மருந்தை உள்ளே செலுத்தியதால் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க:மதுரையில் ஆர்ச் அகற்றும் பணியின் போது விபத்து: ஜேசிபி ஆபரேட்டர் உயிரிழப்பு!
நேற்று காலையிலேயே அவர் இறந்து விட்டார் ஆனால் தவறை மறைப்பதற்காக எங்களிடம் சிகிச்சை நடந்து வருவதாக ஏமாற்றி விட்டனர். சிகிச்சை நடப்பதாக இருந்தால் ஏன் போலீசார் அங்கு வரவேண்டும்? எவ்வளவோ பேருக்கு சிகிச்சை நடைபெறுகிறது. ஆனால் எங்களிடம் மட்டும் போலீசார் வந்து நீங்கள் ஏதும் பிரச்சனை செய்து விட வேண்டாம் என்று கூறுகிறார்கள். இரவு 9 மணிக்கு சிறுவன் இறந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். அதற்கு முன்பு மருத்துவரிடம் கேட்டபோது, சிறுவன் உயிரோடுதான் இருக்கிறான் என்று கூறியதாக தெரிவித்தார்.
மேலும், இது குறித்து தெரிந்து கொள்வதற்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, ''நேற்று நான் விடுமுறையில் இருந்தேன்'' என ஒரே வார்த்தையில் பதில் அளித்து முடித்து விட்டார்.