சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சம்போ செந்தில் என்கிற பிரபல ரவுடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை காவல்துறையினர் இன்டர் போல் மூலமாக சம்போ செந்திலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை காவல்துறையின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு மூலம் இந்த ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சம்போ செந்தில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகி நிலையில், அவரைக் கைது செய்து சென்னை அழைத்து வர இந்த ரெட் கார்னர் நோட்டீஸ் இன்டர்போல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளிகள் எந்த நாட்டில் பதுங்கி இருந்தாலும், அவர்களை அங்கு இருக்கும் காவல்துறை அதிகாரிகள் தற்காலிகமாக கைது செய்வதற்காக இந்த ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்படும். இந்தநிலையில் தான் வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் சம்போ செந்திலை கைது செய்து சென்னை அழைத்து வரும் நடவடிக்கையில் இந்த ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சம்போ செந்திலுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களில் 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்டர்போல் மூலமாக 'ரெட் கார்னர்' நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் எந்த நாட்டில் பதுங்கி இருப்பார் என்ற தகவலை கண்டுபிடித்து அவரை கைது செய்து அழைத்து வரும் நடவடிக்கையிலும் சென்னை காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஏன் விடைக்குறிப்புகளை வெளியிடுவதில்லை? - உயர்நீதிமன்றம் கேள்வி!