சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்தரநாத் இன்று (ஜூலை 31) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் 11 தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் மூலம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இது தடுப்பூசிகளை முற்றிலும் இலவசமாக வழங்குவதை கைவிடும் செயலாகும். இது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். தடுப்பூசிகளால் தடுக்கப்படக் கூடிய தொற்று நோய்களின் பரவலை அதிகப்படுத்தும். இது தமிழக மக்களின் நலன்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக மாறும். தேசிய சுகாதார இயக்கம் (NHM), உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி மூலதனம் ஆகியவற்றின் தனியார்மயமாக்கல் கொள்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்று நடைமுறைப்படுத்த முயல்வது ஏற்புடையதல்ல. அம்முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும்.
பேறுகால விவகாரம்: தமிழ்நாட்டின் பேறுகால தாய்மார்களின் மரண விகிதம் 45.5 ஆக குறைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பேறுகால தாய்மார்களின் மரணம் ஒன்று கூட நடைபெறவில்லை என்ற செய்தி பாராட்டுக்குரியது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 14.5 ஆகவும், வேலூர் மாவட்டத்தில் 20.5 ஆகவும், பேறுகால தாய்மார்கள் மரணங்கள் குறைந்துள்ளன. அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை கடுமையாக நிலவுகின்ற இக்காலக் கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகின்ற மகப்பேறு மருத்துவர்களின் பணியாளர்களின் இத்தகைய சாதனை மகத்தானது, பாராட்டுக்குரியது.
இருப்பினும், அரசுப் புள்ளி விவரங்களில் மாவட்ட அளவில் பேறுகால தாய்மார்கள் மரணங்களில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 77 ஆகவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 72 ஆகவும் உள்ளன. இது போன்று சில மாவட்டங்களில் பேறுகால தாய்மார்கள் மரணம் மிக அதிகமாக இருக்கின்றன என்பது கவலை அளிக்கிறது. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்.
பிற மாநிலங்களை ஒப்பிடும்பொழுது, தமிழ்நாட்டில் 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 62 மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், 37 மாவட்ட மருத்துவமனைகள், 256 தாலுகா மருத்துவமனைகள், 1,830 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அடிப்படை கட்டமைப்பு வலிமையாக உள்ளது.
அவ்வாறு இருந்தாலும் பேறுகால தாய்மார்களின் மரண விகிதங்கள் குறைவது என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டில் போதுமானதாக இல்லை. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து களைவதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். கேரளாவில் 19, மகாராஷ்டிரா 33, தெலங்கனா 44 என பிற மாநிலங்களில் பேறுகால தாய்மார்கள் மரண விகிதங்கள் குறைவாக உள்ளன.
ஆகவே, திறந்த மனதுடன் ஆழமாக ஆராய்ந்து தமிழக பேறுகால தாய்மார்களின் மரண விகிதத்தை மேலும் குறைப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். 24 மணி நேரமும் மகப்பேறு, மயக்க, குழந்தை மருத்துவர்கள், அறுவை அரங்கம், ரத்த வங்கி சேவைகள் இருக்கும் இடங்களில் மட்டுமே பிரசவங்கள் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க வேண்டும் என வற்புறுத்தக்கூடாது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 500க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் பணி இடங்கள் காலியாக உள்ளன.
மகப்பேறு மருத்துவர்கள் பணிச் சுமையை தாள முடியாமல் அதிக அளவில் அரசுப் பணியிலிருந்து தொடர்ந்து விலகி வருகிறார்கள். அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 24 மணிநேரம் தொடர் பணியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பணி இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கூட யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நுழையலாம். அங்கு பணிபுரியும் மருத்துவர்களை எளிதில் தாக்கலாம் என்ற அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும்.
மேலும், அரசுப் பணியில் இருந்து விலகும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் மகப்பேறு மருத்துவர்களாக உள்ளனர். அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு அதிகபட்சமாக காலையில் 8 மணி நேரமும், இரவில் 12 மணி நேரமும் மட்டுமே தொடர்ச்சியான பணி வழங்க வேண்டும். தொடர்ச்சியாக 24 மணி நேர பணி வழங்கக் கூடாது.
சிசேரியன் விவகாரம்: அண்மையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெண்கள் வேலை பார்ப்பது குறைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) குழந்தை பிறப்பது அதிகரித்துள்ளது என்ற கருத்தை கூறியுள்ளார். இது ஏற்புடையதல்ல. இது அறிவியலுக்கு புறம்பானது.
சமூக பொருளாதார மாற்றங்களின் காரணமாக, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெண்களுடைய வேலை முறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மை. ஆனால், அதனால் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிரித்துள்ளது என்பது சரியல்ல.
இன்றும் பெண்கள் ஆண்களை விட வீட்டு வேலைகளை அதிகமாக செய்ய வேண்டிய சூழலில் உள்ளனர். வீட்டு வேலைகளை செய்வதோடு, சமூக உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். எனவே, பெண்கள் வேலை செய்வது குறைந்துள்ளது என்பது சரியல்ல.