சென்னை: தமிழகத்தில் தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.
மேலும், 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 நபர்கள், தங்கள் ஆதார் எண்ணை தங்களது குடும்ப அட்டையோடு இணைத்துள்ளனர். மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும் முன்னுரிமை பெற்ற 95.67 லட்சம் அட்டைகளும் உள்ளன.
இதுமட்டுமல்லாது, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு, ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதாலும், கைரேகைப் பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாலும், யார் வேண்டுமானாலும் எந்த நியாய விலைக் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை தற்பொழுது உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே கைரேகையைப் பதிவு செய்துள்ளதால், மற்றவர்களும் கட்டாயம் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பொருள்கள் அளவு குறைக்கப்படும் அல்லது பெயர் நீக்கப்படும் என நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவித்து வருவதால் பொதுமக்கள் அச்சமும், பதற்றமும் அடைந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, இது குறித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், பெரும்பாலானோர் தங்களுடைய கைரேகையைப் பதிவு செய்யவில்லை. ஆகவே, இது சம்பந்தமாக தற்பொழுது மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு நியாய விலைக் கடை ஊழியர்கள் அறிவுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் விவகாரம்; வரைபடம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!